Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியான ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காசோலை: சா.மு நாசர் எம்எல்ஏ வழங்கினார், மேலாளர், மேற்பார்வையாளர் கைது

ஆவடி: ஆவடியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காசோலையை சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கி ஆறுதல் கூறினார். ஆவடி அடுத்த ஜே.பி.எஸ்டேட் பகுதி, சரஸ்வதி நகர், குறிஞ்சி தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பணியில் ஆவடி அருந்ததிபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (25) நேற்று முன்தினம் விஷவாயு தாக்கி பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆவடி போலீசார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உட்பட 3 மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் காஞ்சிபுரம், அம்மங்கரை தெருவைச் சேர்ந்த நிறுவன மேலாளர் ரவி (50) மற்றும் ஆவடி, ஜெ.பி.எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த மேற்பார்வையாளர் ஆனந்த் பாபு (30) ஆகியோரை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்து நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த கோபிநாத் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கான காசோலை மற்றும் இறுதிச்சடங்கு செய்தவதற்காக ரூ.1 லட்சத்தை ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் நேற்று காலை, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து கோபிநாத்தின் குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் மாநகராட்சி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, பொறியாளர் ரவிச்சந்திரன், சத்தியசீலன், உதவி பொறியாளர் குமார், ஆவடி பகுதிச் செயலாளர் பேபிசேகர், பொன் விஜயன், நாராயணபிரசாத், மண்டலக்குழு தலைவர்கள் அமுதா பேபிசேகர், ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் இருந்தனர்.