ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே விவசாய நிலத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயி கதறும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீ விலாசபுரம் கிராமத்தில் வசிப்பவர் தரணிபதி. விவசாயியான இவர், தனது குடியிருப்புக்கு அருகே சுமார் 3 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்துள்ளார். தற்போது, ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகமும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து குடியிருப்பு பகுதிகளுக்கு கழிவுநீர் கால்வாய் கட்டியுள்ளது. இந்த, கழிவுநீர் கால்வாயில் இருந்து நாள்தோறும் வெளியேறும் கழிவுநீர் இவருடைய சொந்தமான நிலத்தில் விட்டுள்ளனர். இதனால், அந்நிலத்தில் எந்தவித விவசாயமும் செய்ய முடியாமல் நிலத்தின் மண் மாறுபட்டுள்ளது. இதன் காரணமாக அந்நிலத்தில் பயிர் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனால், பாதிப்படைந்த விவசாயி தரணிபதி, கிராமத்தின் அருகாமையில் உள்ள ஓடை கால்வாயில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு கால்வாய் உள்ளது. அந்த, கால்வாயில் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேமிக்கவோ அல்லது அதை மாற்று ஏற்பாடு செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனுக்கன் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள், சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தன்னுடைய நிலத்தில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால், நிலத்தில் இறங்கி பணி செய்ய விவசாய தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால், இவருடைய நிலம் தரிசு நிலமாகவே இருந்து வருவதால், தனக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும், அவர் என்ன செய்வது? யாரை அணுகுவது என்று தெரியாமல் தவித்து வருகிறார். விரைவில், குடும்பத்தாரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறொன்றும் தனக்கு தெரியவில்லை என்று கண்ணீரோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


