Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடும் பேரழிவை சந்தித்த பஞ்சாப்பில் வெள்ள பாதிப்பை பார்வையிட்டார் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்

சண்டிகர்: பஞ்சாப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பஞ்சாப்பில் இம்மாத தொடக்கத்தில் சுமார் 40 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இமாச்சல், காஷ்மீரில் மேகவெடிப்பால் சட்லஜ், பியாஸ், ரவி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பஞ்சாப்பிலும் தொடர் கனமழையால் குருதாஸ்பூர், அமிர்தசரஸ், கபுர்தலா, பதன்கோட், ஹோஷியார்பூர், பெரோஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் 56 பேர் பலியான நிலையில், 1.98 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகின.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நேற்று பஞ்சாப் சென்றார். அமிர்தரஸ் சென்ற அவர் அஜ்னாலா மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோனேவால் கிராமத்திற்கு சென்றார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங், பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, அமிர்தசரஸ் எம்பி குர்ஜீத் சிங் அவுஜ்லா உள்ளிட்ட தலைவர்கள் சென்றனர்.

கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கிருந்து அமிர்தரசின் ராம்தாஸ் பகுதியில் உள்ள குருத்வாரா பாபா புதா சாஹிப்பில் வழிபாடு செய்த ராகுல் காந்தி சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். அவருக்கு சிரோபா எனும் மரியாதை அங்கி வழங்கப்பட்டது. பின்னர் குருதாஸ்பூர் மாவட்டம், தேராபாபா நானக்கில் வெள்ளத்தால் பாதிக்காப்பட்ட குர்சக் கிராமத்தை பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்ட ராகுல், விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். முன்னதாக கடந்த 9ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப்பில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, நிவாரண நிதியாக ரூ.1,600 கோடியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.