Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கடுமையான நெருக்கடி

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு, தமிழ்நாட்டின் வாக்காளர்களிடையே பெரும் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நகர பகுதிகளிலேயே உரிய வாக்காளர்களை கண்டறிய முடியாமல் அரசு ஊழியர்கள் தடுமாறி வருகின்றனர். அப்படியிருக்க, கிராமப்புற பகுதிகளில் இந்த பணிகளை எப்படி முழுமையாக செய்து முடிப்பார்கள், தேர்தல் ஆணையம் தரப்பில் 80 முதல் 90% படிவங்கள் வழங்கப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள். பிஎல்ஓ (BLO) எனப்படும் அரசு ஊழியர்களுக்கு படிவங்கள் வந்து சேருகின்றன.

இவர்களின் கைகளில் வந்ததை வைத்துக்கொண்டு 90 சதவீதம் படிவங்களை விநியோகித்து விட்டதாக கூறுவது பெரும் அபத்தம். அவர்கள் உரியவர்களிடம் படிவங்களை சேர்க்க முடியாமலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெற முடியாமலும் தவித்து வருகின்றனர். அனைத்து பணிகளையும் ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. இதற்கிடையில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வாக்காளர்களை, தேர்தல் ஆணையம் விதித்துள்ள சில காரணங்களால் நீக்கிவிட்டு, வடமாநிலத்தவர்களை சேர்க்கும் முயற்சி நடைபெறுகிறது என்ற சந்தேகம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் விண்ணப்பத்தில் 2002ம் ஆண்டில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண் எல்லாம் குறிப்பிட வேண்டும். குடும்ப உறுப்பினர் யாராவது இறந்துவிட்டால் இறப்பு சான்றிதழ் கட்டாயமாகிறது. இப்படியாக நிறைய விவரங்கள் கேட்கிறார்கள். அதுவும் ஒரு மாதத்தில் பூர்த்தி செய்து கொடுக்கவில்லை என்றால் பெயரை நீக்கி விடுவார்களாம். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை கிராமத்து மக்கள் மற்றும் வயதானவர்கள் தான். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு செய்துள்ளது.

அதீத பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி இன்று எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கிறது. எஸ்ஐஆர் திருத்தப்பணிகள் உரிய திட்டமிடல் இல்லாமலும், பயிற்சிகள் அளிக்காமலும், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி வழங்காமலும் அவசர கதியில் மேற்கொள்வதற்கு நிர்பந்தம் செய்யப்படுகிறது. இது அனைத்து நிலை வருவாய் ஊழியர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். அரசு விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொள்ள நிர்பந்தம் செய்யக்கூடாது.

ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் முழுமையாக ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை, மாவட்ட ஆட்சியர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்து, மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் தலையிட்டு, சுமூகமான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். 6.36 கோடி வாக்காளர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் வாக்காளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கடுமையான நெருக்கடியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது.