Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இ-சேவை மூலம் வெற்றி பெற்றேன் :தொழில்முனைவோர் பிரியங்கா பாலகிருஷ்ணன்!

இன்று பெண்கள் தொழில் மற்றும் பொருளாதார சுதந்திரத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளவே பெரிதும் விரும்புகிறார்கள். அதில் தன்னிச்சையாக செயல்பட்டு வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு போட்டிகள் நிறைந்த தொழில்துறையில் தனக்கென தனிப்பாதை வகுத்துக் கொண்டு வலம்வருவதில் வல்லவராக திகழ்கிறார்கள் இன்றைய தலைமுறை பெண்கள். அதில் தன்னோடு சேர்த்து, தான் சார்ந்த சமூகத்தின் வெற்றியையும் முன்னெடுத்துச்செல்கிறார்கள். அப்படியான ஒருவர்தான் இருபத்தி ஒன்பதே வயதான தஞ்சாவூர் அருகில் கோநகர் நாடு சார்ந்த உப்புண்டார்பட்டி என்னும் சிறு கிராமத்தை சேர்ந்த பிரியங்கா பாலகிருஷ்ணன். இவர் தற்போது திருப்பூரில் சொந்தமாக இ-சேவை மையம் அமைத்து பலருக்கும் பல்வேறு பணிகளை செய்து தருகிறார். அதனை பலருக்கும் சொல்லிக் கொடுத்து பல்வேறு தொழில் முனைவோர்களையும் உருவாக்கி வருகிறார் பிரியங்கா. இவர் தனது இ- சேவை மையம் மற்றும் அந்த சேவைகளுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இ-சேவை பணிகள் குறித்த அறிமுகம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

நான் இன்ஜினியரிங் பட்டதாரி. நான் தனியார் பணியில் இருந்து வந்தேன். கோவிட் தாண்டவமாடிய காலகட்டத்தில் வீட்டில் சும்மாதான் இருந்தேன். அப்போது ஊர் விட்டு ஊர் செல்ல இ- பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறையிலிருந்தது. எனது உறவினர் குடும்பம் என்னை ஆன்லைனில் இ- பாஸ் விண்ணப்பிக்க உதவுமாறு கேட்டார்கள். நானும் அவர்களுக்கு இ-பாஸ் பெற்றுக் கொடுத்தேன். அப்போது எனக்கு சிறு தொகை ஒன்றை நான் மறுத்தும் எனது சேவைக்காக வழங்கினார்கள். அது தான் இத்தொழிலை தொடங்க காரணமாக அமைந்த ஒரு சந்தர்ப்பம். அப்போது இது மாதிரி என்னென்ன சேவைகளை மற்றவர்களுக்கு வழங்க முடியும் என ஆர்வமாக தேடித்தேடி கற்றுக் கொண்டேன். ஒரு கணினியையும் , பிரிண்டரையும் வைத்துக்கொண்டு இத்தொழிலை தொடங்கினேன். தற்போது பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை ஆன்லைன் மூலமாக பலருக்கும் விண்ணப்பித்துத்தருகிறேன். வயதானவர்கள், ஆன்லைன்பயன்படுத்த தெரியாதவர்கள் எளியவர்கள் என பலரும் எங்களது வாடிக்கையாளர்களாகி விட்டனர்.

உங்களிடம் மக்கள் என்னென்ன சேவைகளை எதிர்பார்த்துவருகின்றனர்?

இன்று அன்றாடம் ஏதோ ஒரு தேவைகளுக்காக மக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது. அதனை பலருக்கு விண்ணப்பிக்க தெரியாது, அது போல் அப்படியே தெரிந்து வைத்திருந்தாலும் பல்வேறு பணிகளுக்கிடையே இதற்கான நேரம் கிடைப்பதில்லை என்கிறார்கள். அப்படியானவர்கள் எங்களிடம் ஆன்லைனில் விண்ணப்பித்துத்தரக்கேட்கிறார்கள். நிறைய வயதானவர்கள் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எங்களிடம் வருகிறார்கள். எளிய மக்கள் ஆதார் கார்ட், ரேஷன்கார்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக எங்களை அணுகி வருகிறார்கள். அதே போன்று சாதிச் சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ் என பல்வேறு தேவைகள் இருக்கிறது. அவை அனைத்தும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வசதிகள் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவர்களின் தேவைக்கு தகுந்தாற்போல் உதவுவதோடு எங்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. எனவே இதனை தொழிலாக செய்யவும், ஆதரவற்ற பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்காக ஏற்படுத்தி தருகிறேன். என்னிடம் இந்த மாதிரியான ஆன்லைன் விண்ணப்பம் செய்ய முறையாக கற்றுக்கொள்வதற்காக நிறைய பேர் எங்களை அணுகுகிறார்கள்.

இதற்காக பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் தோன்றியது எப்போது?

நான் இந்த சேவை மையத்தினை ஆரம்பித்து தொழிலாக செய்து வெற்றி கண்டதைப் பார்த்த மாற்றுதிறனாளி நண்பர் ஒருவர் தனக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்குமாறு கேட்டார். அவருக்கு இதுகுறித்து முறையான பயிற்சி அளித்தேன். தற்போது அவர் இந்த தொழிலை வெற்றிகரமாக செய்துவருவதைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அப்போதுதான் பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. என்னிடம் பயிற்சி பெற்று தற்போது நிறைய பேர் இத்தொழிலில் இறங்கி வெற்றி கண்டது எனக்கும் பெருமிதமாக ஒன்று . இது போன்ற பயிற்சியினை தமிழகமெங்கும் அளிக்குமாறு பலரும் கேட்டு வருகிறார்கள் என்பதே நல்ல விஷயம் தான். என்னிடம் பயிற்சி பெற்ற பல ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தனி இ-சேவை மையம் அமைத்து தொழில்முனைவோராக மாறி வருகிறார்கள் என்பது எனக்கு பெரும் நிறைவினை தருகிறது.

உங்கள் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

தற்போது திருப்பூரில் இந்த சேவை மையத்தின் நடத்தி வருகிறேன். வெளியூர் ஆட்களுக்கும் இந்த சேவையை செய்து கொடுக்கிறேன் தான். ஆனாலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இந்த சேவை மையத்தின் துவங்க வேண்டும் என்கிற ஆசைகள் இருக்கிறது. அதே போன்று நிறைய பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே மாற்று திறனாளிகள் மற்றும் ஏழை எளிய பெண்களுக்கு இலவசமா சேவை வழங்கி வருவதோடு, இலவச பயிற்சியும் அளித்துவருகிறேன். தற்போது இன்னும் நிறைய பேருக்கு செய்ய வேண்டும் என்கிற ஆசைகள் இருக்கிறது. இந்த சேவைகளுக்காக நிறைய பாராட்டுதல்களையும் விருதுகளையும் பெற்று வருவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த சேவையாளராக விருது அளித்து கௌரவித்தார் கள். சமீபத்தில் சிறந்த சேவையாளருக்கான விருது ஒன்றினை சென்னையில் வென்றதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொழிலை மேலும் விரிவுபடுத்த அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல நிறைய முன்னெடுப்புகளை செய்து வருகிறேன். எனது குடும்பமும் எனக்கான முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறது.

உங்களை போன்ற பெண் தொழில் முனைவோருக்கு நீங்கள் சொல்லவிரும்புவது?

இது பெண்களுக்கேற்ற பாதுகாப்பான தொழில். வீட்டிலிருந்து கூட செய்யலாம். ஒரு கம்யூட்டர்

அல்லது லேப்டாப் மற்றும் பிரிண்டர் ஒன்று இருந்தாலே போதும் தொழிலை தொடங்கி விடலாம். பெரிய அளவிலான முதலீடு ஏதும் தேவையில்லை. நமது உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைத்து விடும். பெண்கள் யாருடைய தயவுமின்றி தன்னம்பிக்கையுடன் வாழலாம். கொஞ்சம் உழைப்பும், தன்னம்பிக்கையும் மட்டும் போதும் என பெருமிதத்துடன் சொல்கிறார் வாழ்வில் தனியொரு பெண்ணாக போராடி ஜெயித்த இளம் தொழில்முனைவோர் பிரியங்கா.

- தனுஜா ஜெயராமன்