சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் பகுதியில் அவசர கதியில் விரிவாக்கமின்றி சாலை அமைத்ததால் விபத்து ஏற்படும் அபாயம்
*வாகன ஓட்டிகள் அவதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் பகுதியில் அவசர கதியில் விரிவாக்கம் செய்யாமல் சாலையை அமைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக விக்கிரவாண்டி -கும்பகோணம் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்றது. உயர்மட்ட பாலத்துடன் இணைக்கும் விதமாக நான்கு வழி சாலை பணிகள் துரிதமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் பின்னலூர் பகுதியில் உள்ள பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாக வடலூரில் இருந்து சிதம்பரம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. நான்கு வழி சாலை இணையும் பகுதி அருகே இச்சாலை உள்ளது.
இந்நிலையில் பின்னலூர் பகுதியில் உள்ள சாலையை அவசர கதியில் விரிவாக்கம் செய்யாமல் இருவழிச்சாலையாக அமைத்துள்ளனர். இதனால் இதன் வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பழைய கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை சாலை சேத்தியாத்தோப்பு - வடலூர் மார்க்கமாக செல்கிறது.
இந்த சுரங்கப்பாதை சாலையின் மறைவில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பில் இருந்து வடலூர் நோக்கி செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்காக மட்டும் தான் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வடலூரில் இருந்து வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதை வழியாக விதிகளை மீறி சேத்தியாத்தோப்பு நோக்கி செல்கின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே சுரங்கப்பாதையின் இரண்டு முகப்பு பகுதிகளிலும் வேகத்தடை அமைத்து, தவறுதலாக வரும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் விதமாக எச்சரிக்கை பதாகைகளை அமைக்க வேண்டும். மேலும் பின்னலூர் பகுதியில் சாலையை முழுமையாக விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.