சென்னை: ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பாளர், பன்முக உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, காவல்துறை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தொகுப்பூதிய, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பாதுகாப்பாளர் காலிப்பணியிடங்கள் 2. அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.இது ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும்.மாத ஊதியமாக ரூ.12,000 வழங்கப்படும். பணியிடம், ஒருங்கிணைந்த சேவை மையம், தாம்பரம் சானடோரியம். பன்முக உதவியாளர் பணியிடத்துக்கு (காலிப்பணியிடம் 1) ஏதாவது அலுவலகத்தில் பராமரிப்பாளராக பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்படும். விரும்பும் பதவிகளுக்கு https://chennai.nic.in என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் வருகிற 31ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது oscchennaib@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.