புதுடெல்லி: பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் நேற்று பேசியதாவது: ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) கேசவ் பலிராம் ஹெட்கேவரால் கடந்த 1925ம் ஆண்டு விஜயதசமி நாளில் நிறுவப்பட்டது. ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்ட போது நாடு பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தின் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தது. அது நாட்டின் சுயமரியாதை, தன்னம்பிக்கையை ஆழமாக காயப்படுத்தியிருந்தது.
நாட்டு மக்கள் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாகினர். எனவே நாட்டின் சுதந்திரத்துடன், அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது முக்கியமாக இருந்தது. அத்தகைய அடிமைத்தனத்திலிருந்து நாட்டை விடுவிக்கும் நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர்களின் கொள்கைகள் லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு தியாகம், சேவையின் பாதையை காட்டியது.
இந்த தியாகம், சேவை, ஒழுக்கம் ஆகியவையே ஆர்எஸ்எஸ்சின் உண்மையான பலம். அடுத்த வாரம் விஜயதசமியில் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஆர்எஸ்எஸ் கடந்த 100 ஆண்டுகளாக இடைவிடாமல் அயராது தேச சேவையில் ஈடுபட்டுள்ளது. நாட்டில் எங்கு இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும் முதலில் செல்வது ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள்தான். முதலில் தேசம் என்ற இந்த உணர்வு எப்போதும் லட்சக்கணக்கான தன்னார்வலர்களின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு முயற்சியிலும் மிக முக்கியமானது.
வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை கொண்டாடும் நாம் காதி பொருட்களை வாங்க வேண்டும். இந்த பண்டிகை காலத்தில் சுதேசி பொருட்களுடன் மட்டுமே கொண்டாட மக்கள் உறுதி ஏற்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுங்கள். எப்போதும் நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதை மட்டுமே வாங்குங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.