வாஷிங்டன்: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக, அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரும், வெள்ளை மாளிகை பணியாளர் துறை இயக்குநருமான செர்ஜியோ கோர் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் புதிய தூதராக செர்ஜியோ கோர் (38)நியமனத்தை அமெரிக்க செனட் உறுதி செய்துள்ளது. செர்ஜியோ கோரை போன்று 107 நியமனங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட நிர்வாக செலவுகளுக்கு நிதி கிடைக்காமல் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. புதிய நியமனங்களுக்கு செனட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ஆதரவாக 51 பேரும், எதிராக 47 பேரும் வாக்களித்துள்ளனர்.
செர்ஜியோ கோரை தவிர தெற்கு ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவு செயலாளராக பால் கபூர், சிங்கப்பூர் நாட்டுக்கான புதிய தூதராக அஞ்சலி சின்கா ஆகியோரின் நியமனங்களுக்கும் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
கோர் பற்றி டிரம்ப் பதிவிடுகையில், கோர் பல ஆண்டுகளாக என் பக்கத்தில் இருக்கும் ஒரு சிறந்த நண்பரை.உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியத்திற்கு முழுமையாக நம்பக்கூடிய ஒருவர் இருப்பது முக்கியம். செர்ஜியோ ஒரு அற்புதமான தூதராக மாறுவார்” என்று குறிப்பிட்டிருந்தார்.