Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?

சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோதும், அவர் மறைவுக்கு பிறகும் 3 முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக உரிமை மீட்புக் குழு என்னும் பெயரில் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதனிடையே பாஜ கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். மறுபுறம், எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் பல இடங்களில் டெபாசிட் இழந்து வரலாற்று தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்வியை அடுத்து ஓபிஎஸ் அணி உடைந்தது. புகழேந்தி, ஜேசிடி பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் விலகினர். வெல்லமண்டி நடராஜனும், மற்ற பிற ஆதரவாளர்களும் ஓபிஎஸ்சை சந்திக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் பாஜவில் சேருமாறு ஓபிஎஸ்சுக்கு அழைப்பு வந்தும், அதை ஓபிஎஸ் மறுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவை கைப்பற்ற வாய்ப்பு இல்லாததாலும், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு சாதகமாக இல்லாததாலும் செய்வதறியாத ஓபிஎஸ், சோர்ந்துவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்்நிலையில் சென்னையில் இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். இதில் அவர் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி தனிக் கட்சி தொடங்க அறிவிப்பு செய்வார் என்று கூறப்படுகிறது.