Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அடுத்தடுத்து வந்த ‘சென்யார்’, ‘டிட்வா’ புயல்களால் 3 நாடுகளில் மழை வெள்ளத்தால் 900 பேர் பலி: ஆயிரக்கணக்கானோர் மாயம்; மீட்பு பணி தீவிரம்

கொழும்பு: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வீசிய இரட்டை புயல்களால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தொள்ளாயிரத்தை கடந்துள்ள சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சாதாரணமாக வீசும் காற்றை விட, இம்முறை மிகவும் அரிதாக உருவான ‘சென்யார்’ மற்றும் ‘டிட்வா’ ஆகிய இரு பெரும் புயல்கள் கோர தாண்டவம் ஆடியுள்ளன. இதன் காரணமாக இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழையும், அதனைத் தொடர்ந்து பயங்கரமான நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இயற்கையின் இந்தச் சீற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதுடன், சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுப் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ளன.

மோசமான வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைவதில் ஆரம்பம் முதலே பெரும் சிக்கல் நீடித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி இந்த மூன்று நாடுகளிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டும் 442 பேர் உயிரிழந்துள்ளனர்; அங்கு துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போர்க்கப்பல்கள் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் 334 பேர் பலியாகியுள்ள நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

தாய்லாந்தில் உள்ள ஹாட் யாய் நகரில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பெய்த கனமழையால் 170 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் மந்தமாக நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், ‘பாதிக்கப்பட்ட பகுதிகள் சேறும் சகதியுமாக உள்ளதால் இடிபாடுகளை அகற்றுவதிலும், மீட்புப் பணிகளிலும் பெரும் சவால் நீடிக்கிறது’ என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.