Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.பொன்னுசாமி (74) மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.பொன்னுசாமி (74) காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி தோல்வியை தழுவினார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. இவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இருந்த நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை, வீட்டில் ஓய்வெடுத்து வந்த பொன்னுசாமிக்கு திடீரென்று இதயத்தில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பொன்னுசாமி அழைத்து செல்லப்பட்டார். அப்போது, இதயம் மற்றும் சுவாச மண்டலத்தில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணி அளவில் பொன்னுசாமி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், அவர் மூன்றாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்தார். பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏ.பொன்னுசாமி (74) மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் கு.பொன்னுசாமி அவர்கள் மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அத்தொகுதி மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

கழகத்தின் மீது தீவிரப் பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்த அவர், நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.

அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள். அவரது குடும்பத்தினர். உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.