Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சென்சார் சொல்லும் விவசாய வழிமுறைகள்...

இன்றைய வேளாண்மை, அறிவியலுடனும் தொழில் நுட்பத்துடனும் கலந்து புதிய பாதையை நோக்கி பயணிக்கிறது. விவசாயம் என்பது மாறி வரும் சூழ்நிலைகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டிய ஒரு செயற்பாடாக மாறியுள்ளது. முன்னோர் காலத்தில் விவசாயி நிலத்தில் நேரில் நின்று கணிப்புகளை செய்ததே வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது நிலம் தானாகவே பேசும் நிலையை உருவாக்கும் காலம் வந்துவிட்டது. இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things IoT) மற்றும் சென்சார் தொழில்நுட்பம் (Sensor Technology) இன்று விவசாயத்தில் மாறாத பகுதியாகவே திகழ்கின்றன.இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நிலத்திற்குள் மற்றும் மேற்பரப்பில் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்படுகின்றன. இவை மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை, சூரிய ஒளி அளவு, காற்றின் ஈரப்பதம், பி.எச். மதிப்பு போன்ற பல்வேறு விவரங்களை சில நொடிகளில் அளிக்கின்றன. அந்த தரவுகள் இணையவழி (wireless) மூலம் விவசாயியின் கைபேசி, டேப்லெட் அல்லது கணினிக்கே நேரடியாகவும் அனுப்பப் படும். ஒவ்வொரு சென்சாரும் ஒரு தனிப் பணியை மேற்கொள்கின்றன.

மண்ணின் ஈரப்பதம் ஆராயும் சென்சார், நிலத்தில் போதுமான அளவு ஈரப்பதம் உள்ளதா அல்லது தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை விவசாயிகளுக்கு அளிக்கிறது. வெப்பநிலையை ஆராயும் சென்சார், தாவர வளர்ச்சிக்கு உகந்த வெப்பமோ குளிரோ நிலவுகிறதா என்பதைப் பதிவு செய்கிறது. மண் நுண்ணியல் சென்சார்கள், மண்ணில் ஊட்டச்சத்து குறைவுகளை உணர்ந்து, உரம் தேவைப்படுகிறதா என்பதை முன்கூட்டியே தெரிவிக்கின்றன. சன்லைட் சென்சார்கள், ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான சூரிய ஒளி கிடைக்கிறதா என்பதையும் கண்காணிக்கின்றன.இந்தத் தகவல்களை விவசாயி தனது மொபைல் செயலிகளின்(Mobile Application) மூலம் எளிதில் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடிகிறது. வீட்டிலிருந்தபடியே, நிலத்தில் நடக்கும் சூழ்நிலை மாற்றங்களை அறிந்து கொண்டு, துல்லியமான தீர்வுகளை எடுக்கலாம். தன்னிச்சையாக இயங்கும் மோட்டார்கள், தானாகத் தண்ணீர் வழங்கும் பாசன அமைப்புகள், துல்லியமான உர வழங்கும் சிஸ்டங்கள் இவற்றால் விவசாயம் மிகச் சீரான முறையாக முன்னேறுகிறது.

அந்த வகையில், தண்ணீர், உரம், வேலை நேரம் போன்றவற்றை மிச்சப் படுத்தி அதிக மகசூலை கொடுக்கக்கூடிய இத்தொழில்நுட்பம், நவீன முறையில் விவசாயம் செய்பவர்கள் மத்தியில் பரவத் தொடங்கியுள்ளது. இயற்கையை புரிந்து கொண்டு அதனுடன் இணைந்து செயல்படும் அறிவியல் வழிகாட்டியாக, ஐ.ஓ.டி மற்றும் சென்சார் தொழில்நுட்பம் இன்று புதிய நம்பிக்கையை விதைக்கிறது.