Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து, திருக்கோயில் சார்பில் ரூ.3.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில் 2025 -26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (10.11.2025) திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சென்னை இணை ஆணையர் மண்டலங்களை சேர்ந்த 70 வயது பூர்த்தியடைந்த 200 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்து, திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ், 2,000 மூத்த தம்பதியினர் சிறப்பு செய்யப்படுகின்றனர். இத்தம்பதியினருக்கு ரூ. 2,500 மதிப்பிலான வேட்டி மற்றும் சட்டை, புடவை, இரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

அதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர், பார்த்தசாரதி சுவாமி கோயில் சார்பில் திருவல்லிக்கேணி, நல்லத்தம்பி தெருவில் ரூ. 2.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துணை ஆணையர், செயல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்புகளையும், பார்த்தசாரதி தெருவில் ரூ. 1.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பினையும் திறந்து வைக்கின்றார். இந்நிகழ்ச்சிகளில் தவத்திரு ஆதீன பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.