சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தற்போது 100 வயதாகிறது. இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கீழே தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் உடல்நிலை சீராகி வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள், நல்லகண்ணு சாதாரணமாக உணவு உட்கொள்ள முடியாத காரணத்தால், குழாய் மூலம் நேரடியாக உணவு வயிற்றுக்கு செல்லும் விதமாக உணவு பாதை அமைக்கப்பட்டுள்ளது, நேற்று முன்தினம் இரவு தூக்கத்தில் இருக்கும்போது அந்த உணவு குழாய் தெரியாமல் கழன்றுவிட்டது தெரியவந்துள்ளது. அதனை சரி செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இட்லி, சாதம் உள்ளிட்ட கெட்டியான உணவுகளை திரவ வடிவில் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்து மீண்டும் அந்த உணவு குழாய் பொருத்தப்படும். மேலும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.