Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உயரதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனரா? அஜித்தை ஒரு நாள் முழுக்க அடித்து துன்புறுத்தியது ஏன்? கைதான காவலர்கள், டிஎஸ்பியிடம் சிபிஐ விசாரணை

மதுரை: அஜித்குமாரை ஒருநாள் முழுவதும் அடித்து துன்புறுத்தியது ஏன்? உயரதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனரா என்று கைதான காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அஜித்குமார் குடும்பத்தினர், கோயில் ஊழியர்கள், புகார் அளித்த பேராசிரியை நிகிதா, அவரது தாயார் சிவகாமி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ விசாரித்து உள்ள நிலையில், சிறையிலுள்ள தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரையும் நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று மாலை வரை காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது.

அப்போது, மடப்புரத்தில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜூன் 27 மற்றும் 28ம் தேதி நடந்த முழு சம்பவங்கள் குறித்தும் 5 தனிப்படை காவலர்களிடமும் விசாரணை நடத்தினர். யாருடைய உத்தரவின்பேரில் அஜித்குமாரை விசாரணை செய்தீர்கள்? திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமாரை விசாரணை நடத்தி அனுப்பிய பிறகு, எதன் அடிப்படையில் மீண்டும் அவரை அழைத்துச் சென்று விசாரித்தீர்கள்? அஜித்குமாரை ஒருநாள் முழுக்க அடித்து துன்புறுத்தியது ஏன்? அஜித்குமார் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது ஏன்?

அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று உயரதிகாரிகள் யாரேனும் அழுத்தம் கொடுத்தார்களா? அஜித்குமாரை எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினீர்கள்? அஜித்குமார் நகையை எடுத்ததாக குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என அடித்து துன்புறுத்தினீர்களா? அவரை தாக்கச் சொல்லி உத்தரவிட்டது யார் என்பது உள்ளிட்ட ஏராளமான அடுக்கடுக்கான கேள்விகளை, தனிப்படை காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கனவே கைதான போலீசாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களுக்கு வந்த அழைப்புகள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

விசாரணையை முடித்து, மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கே.செல்வபாண்டி முன் மீண்டும் ஆஜர்படுத்தினர். இவர்களை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் மரண வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் நேற்று மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அவரிடமும் 5 தனிப்படை காவல்துறையினர் அளிக்கும் தகவலின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது.