மூத்த தலைவர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கலையே என்று நீக்கப்பட்டவர் பட்ட வேதனையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பெண் காவல் நிலையத்தின் பெயர் ரொம்ப டேமேஜாகி கிடக்குதாமே.. அது எந்த ஸ்டேஷன்..’’ என ஆவலோடு கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்தின் மங்கலம் பகுதி பெண்கள் காவல்நிலையத்தில் அதிகரித்து வரும் லஞ்சலாவண்யத்தினால் ஸ்டேசன் பெயர் மாவட்ட அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இங்கு ஏற்கனவே பணிபுரிந்த பெண் உயர் அதிகாரி ஒருவர், விவாகரத்து வழக்கு ஒன்றில் சம்மந்தப்பட்ட தம்பதி நகைகளை தனது சொந்த செலவிற்கு பயன்படுத்தி மாட்டிக் கொண்டு கம்பி எண்ணும் நிலை வந்தது.
ஆனாலும், இக்காவல்நிலையத்தில் பணிபுரிவோரிடம் மாற்றத்தைக் காணோம் என மக்கள் புலம்புகின்றனர். தற்போதுள்ள பெண் அதிகாரி மற்றும் ஒருசில காவலர்கள் வரதட்சணை வழக்குகளில் அதிகளவில் கையூட்டு பெற்று கொண்டு வழக்கினை திசை திருப்பி விடுவது அதிகரித்து வருகிறதாம்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியின் இளம்பெண் ஒருவர், தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் கணவர் குடும்பத்தினர் அடித்து விரட்டி விட்டதாக கொடுத்த புகாரின்பேரில், கணவர், அவரது தாயார், கணவரின் சகோதரியுடன், அவரது கணவர் பெயரையும் வழக்கில் சேர்த்தனர்.
ஆனால் பெண்ணின் கணவர் குடும்பத்தினர் முன்ஜாமீன் கேட்டு மனு போட்டுள்ள நிலையில் தலைமறைவாகிவிட்டனர். வெளியூரில் வசிக்கும் சகோதரி அவரது கணவருக்கு முன்ஜாமீன் கிடைத்து 15 நாள் தினசரி காலை மாலையில் ஸ்டேசனில் கையெழுத்து போடவேண்டிய நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் அவர்கள் ஸ்டேசனில் வந்து கையெழுத்து போடாமல் இருக்க ஒரு பெரும் தொகையை வாங்கி கொண்டு சமாளித்து வருகின்றனர் என்கின்றனர்.
இதனால் மங்கலம் பகுதி பெண்கள் காவல்நிலையத்தின் பெயர் தென்மாவட்ட அளவில் விரைவில் பெயர் பெற்றுவிடும் என்கின்றனர் சக காக்கிகள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாம்பழ கட்சி செய்றகுழு கூட்டத்தில ஆட்களே இல்லயாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாம்பழ கட்சியில தந்தை, மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமா மகனை கட்சியில இருந்து நீக்கி விட்டு செயல் தலைவரா தன்னோட மகளையே நியமித்து அதிரடி காட்டினார் தந்தை. இதனால மாம்பழ கட்சி தந்தை, மகன் என இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர்.
இந்நிலையில, ஒருங்கிணைந்த வெயிலூர் மாவட்ட மாம்பழ கட்சியின் செயற்குழு கூட்டம் வெயிலூர்ல நடந்துச்சு. ராமதாஸ் பிரிவு கூட்டம் தான். இந்த கூட்டத்துக்காக சாலையோரம் கட்சி கொடிகம்பங்கள கட்டியிருந்தாங்களாம். ஆனா உரிய அனுமதியின்றி கட்டியதா கட்சி கொடிகள போலீசாருங்க அகற்றினாங்களாம். இதனால் ஆத்திரமடைஞ்ச மாம்பழ கட்சியை சேர்ந்தவங்க மறியலில் ஈடுபட்டாங்களாம். இதுல 20பேர் கூட இல்லையாம்.
அதோட செயற்குழு கூட்டத்தில கூட 50க்கும் குறைவானவங்களே கலந்துகிட்டாங்களாம். இதனால இந்த செயற்குழுவில கலந்துகிட்ட மாநில துணைத்தலைவர் அதிருப்தி அடைஞ்சாராம். டிசம்பர் மாதம் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில 10 ஆயிரம் பேர திரட்டணும்னு தீர்மானம் போட்டாங்களாம். கட்சி இருக்கிற நிலைமையில, 10 ஆயிரம் பேர எப்படி திரட்டுறது, இது நடக்கிற விஷயமான்னு என மாம்பழ கட்சியினர் பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கவர்னர் அதிர்ந்து போயிட்டாராமே..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘புதுவையில் கடந்த வாரம் மின்சார பேருந்து துவக்க விழா நடந்தது. இதில் ஒப்பந்தப்படி தனியார் பங்களிப்புடன் மின்சார பேருந்து சேவை இயக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அரசே நடத்த வேண்டும். தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என வலியுறுத்தி சுயேச்சை எம்எல்ஏ தலைமையில் 10க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் கறுப்பு கொடி போராட்டத்தை நடத்தின. அரசு விழா நடக்கும் இடத்துக்கே வந்து படுத்து போராட்டம் நடத்தியது கவர்னரை அதிர்ச்சி அடைய வைத்ததாம்.
இது தொடர்பாக கவர்னரின் ராஜ் நிவாஸ் விசாரணை நடத்தியதில் ஆளும் அரசு துணையுடன் போலீஸ் அதிகாரிகள் மெத்தனமா நடந்து கொண்டது தெரியவந்ததாம். உடனே போலீஸ் உயரதிகாரிகளை வரவைத்து கடுமையாக எச்சரித்து போராட்டக்கார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாராம். இதனால் போலீசார், போராட்டக்காரர்கள் மீது ஜாமீனில் வெளியே வராதபடி வழக்கு போடப்பட்டு அவர்களை கைது செய்ய முடிவு செய்து ரகசியம் காத்து வருகின்றனராம்.
வழக்கமாக போராட்டம் நடத்தினால் ஜாமீனில் வெளியே வரும் பிரிவுகள் தான் போடப்படும், தற்போது கடுமையான பிரிவுகளின்படி வழக்கு போடுவது சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரெட்போர்ட் ரொம்ப வருத்தப்பட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கோட்டையானவரை அதிரடியாக நீக்கி இலைக்கட்சி தலைமை அறிவித்தது. இது மாதிரி ஒரு அதிரடி நடவடிக்கை இருக்கும்னு கோட்டையானவர் கொஞ்சமும் எதிர்பார்க்கலையாம்.
இதற்கு காரணம் மலராத கட்சியின் டெல்லி மேலிடம் தனக்கு ஆதரவா இருக்கிறதால இலைக்கட்சி தலைமை இது போன்ற நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லைன்னு நினைத்திருந்தாராம். ஏனெனில் டெல்லி தலைமையின் ஒப்புதலோடு தான் ஒருங்கிணைப்பு தொடர்பாக போர்க்கொடி தூக்கியது, கெடு விதித்தது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாஜி முதல்வரை சந்தித்தது என அனைத்து நிகழ்வுகளும் நடந்ததாம். தமிழ்நாட்டில் மலராத கட்சியின் டெல்லி தலைமை தனக்கு பக்க பலமாக இருக்கும் என்ற நினைப்பில் இருந்தாராம்.
ஆனா நிலைமை தலைகீழாக மாறியது நினைத்து நெருக்கமானவர்களுடன் புலம்பினாராம். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியான போது காரில் பனியன் சிட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்துகிட்டு இருந்தாராம். நீக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் கொஞ்ச நேரம் யார்கிட்டேயும் பேசாமல் இருந்தாராம்.
இலைக்கட்சி தலைமை மூத்த நிர்வாகிகள் சிலரிடம் ஆலோசனை நடத்தின பிறகு தான் நீக்கம் தொடர்பா அறிவிப்பு வெளியிட்டதாம். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பெரும்பாலனவர்கள் கட்சி இணைப்பு தொடர்பா குரல் கொடுத்து வந்தவர்கள் தானாம். ஆனா அவர்கள் கூட எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லையேன்னு மிகவும் வருத்தப்பட்டாராம். இரண்டு நாள் அப்செட்டில் இருந்த கோட்டையானவர் நேற்று தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
