Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மூத்த நிர்வாகி தரக்குறைவாக பேசியதால் விரக்தி தவெக மகளிர் அணி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை முயற்சி: இணையத்தில் வீடியோ வைரல்

சென்னை: தவெக கட்சி நிர்வாகி தரக்குறைவாக பேசியதால் மனம் உடைந்த மகளிர் அணி நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த மணலி, சின்ன சேக்காடு பகுதியை சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி இளவரசி (31). தமிழக வெற்றி கழக மகளிர் அணி நிர்வாகியான இவர் கட்சியின் பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அக்கட்சியில் வட சென்னை மாவட்ட இளைஞரணியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் மாத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தமிழக வெற்றி கழக செயல்பாடுகள் குறித்து மணலி அன்பழகன் தெரு அருகே உள்ள விலையில்லா விருந்தகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இதில் இளவரசி உள்பட அக்கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, இளவரசிக்கு கட்சியில் பொறுப்பு கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், ராஜேஷ் இளவரசியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த இளவரசி வீட்டுக்கு சென்றதும், நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என்னுடைய தற்கொலைக்கு ராஜேஷ் தான் காரணம் என பதிவிட்டு கணவருக்கும், ராஜேஷ் மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த குறுஞ்செய்தியை கண்ட கணவர் கவுதம் வீட்டிற்கு ஓடிவந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளவரசியை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மணலி போலீசார் ராஜேஷ் மற்றும் இளவரசியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தனக்கு தினமும் கட்சி பணியை செய்யவிடாமல் ராஜேஷ் டார்ச்சர் கொடுத்ததாகவும், ஜாதியை குறிப்பிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் எனவே தான் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன் எனவும் இளவரசி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழக வெற்றி கழகத்தில் தற்போது பகுதி, மாவட்டம் வாரியாக பல்வேறு அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால் பதவி வாங்குவதில் ஏற்பட்டுள்ள போட்டியின் காரணமாக தொண்டர்களிடையே உட்கட்சி பூசல் அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.