டிரம்புடனான ‘மெகா’ கூட்டணி ‘மகா’ தலைவலியானது; மோடியின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி: காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் கண்டனம்
புதுடெல்லி: அமெரிக்காவுடனான வர்த்தகப் போரால் இந்திய ஏற்றுமதித் துறை பெரும் சவாலைச் சந்தித்துள்ள நிலையில், இது மோடியின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவைக் காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவின்படி, இந்தியப் பொருட்களுக்கு 50% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கும் அதிரடி உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது, குறைந்த லாபத்தில் இயங்கும் மற்றும் அதிக தொழிலாளர்களை நம்பியிருக்கும் இந்திய ஏற்றுமதித் துறைகளுக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தோல் பொருட்கள், கடல் பொருட்கள் மற்றும் பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
இந்த வரி விதிப்பால், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 15.3% குறையும் என்றும், இறால் ஏற்றுமதி 20.2% சரியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை எட்டுவது, மாற்று சந்தைகளில் கவனம் செலுத்துவது, ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்கள் மூலம் தற்சார்பு நிலையை அதிகரிப்பது போன்ற வழிகளை ஒன்றிய அரசு ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது. ‘ஹவுடி மோடி’ போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் மூலம் மோடி, டிரம்புடன் தனிப்பட்ட நட்புறவைப் பேண முயன்ற போதிலும், அது இந்தியாவிற்கு எந்தப் பலனையும் தரவில்லை.
டிரம்பின் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்ற முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘மேக் இந்தியா கிரேட் அகைன்’ என்ற பார்வையை மோடி முன்வைத்தார். ஆனால் மோடியால் உருவாக்கப்பட்ட அந்த ‘மெகா’ கூட்டணி, இப்போது இந்தியாவிற்கு ஒரு ‘மகா’ தலைவலியாக மாறியுள்ளது. மேலும், இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் ஹெச்-1பி விசா முறையை ஒரு மோசடி என்று அமெரிக்க வர்த்தகச் செயலர் விமர்சித்திருப்பதும், மோடி - டிரம்ப் இடையிலான நட்பின் தோல்வியையே காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஸ் வெளியிட்ட பதிவில், ‘ஏற்கனவே வேலையின்மை பேரழிவைச் சந்தித்து வரும் இந்தியப் பொருளாதாரத்தில், டிரம்பின் வரிகளால் நசுக்கப்படும் இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்கத் தவறியதற்கு மோடி அரசே முழுப் பொறுப்பு’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.