Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயன்பெறுவர்

சென்னை: தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதன்மூலம் 21,70,454 பயனாளிகள் பயன்பெறுவார்கள்.

அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடு தேடி சென்றடைய செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.

மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்பு கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலை கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளுமாக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையிடம் இருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மின்னணு எடை தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களை பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலை கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் இத்திட்டத்திற்கு அரசுக்கு ரூ.35.92 கோடி செலவாகும். மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புற செய்வதுடன் அவர்தம் உணவு பாதுகாப்பையும் உறுதிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’ சென்னை, தண்டையார்பேட்டை கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, பயனாளிகளிடம் உரையாடினார். அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு வீடு தேடி வந்து ரேஷன் பொருட்களை வழங்குவதால், மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது என்றும், குடும்பத்தில் ஒருவராக தங்களது சிரமங்களை அறிந்து இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ சென்னையில் தொடங்கி வைத்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் ஜே.ஜே.எபினேசர், இரா.மூர்த்தி, ஆர்.டி.சேகர், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், அ.வெற்றியழகன், கே.பி.சங்கர்,

தலைமை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சத்யபிரதா சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் லூயிஸ், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் எஸ்.சிவராசு, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) சா.ப.அம்ரித், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் வாயிலாக 34,809 நியாயவிலை கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்கள் பயன்பெறுவர்.

* மேலும் 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளுமாக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

* மின்னணு எடை தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களை பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலை கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.