தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 8 வீரர்களுக்கு ரூ.40.50 லட்சம் ஊக்கத்தொகை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து 2025 அக்டோபர் 24 முதல் 26 வரை ராஞ்சியில் நடந்த 4வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டி பிரிவில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் மானவ்க்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலை, 100 மீட்டர் தடை தாண்டும் பிரிவில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை நந்தினிக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் 4X400 மீட்டர் (கலப்பு) ரிலே பிரிவில் தங்கப் பதக்கம், 4X400 மீட்டர் (பெண்கள்) ரிலே பிரிவில் தங்கப் பதக்கம், 400 மீட்டர் பிரிவில் வெள்ளி பதக்கம் மற்றும் 400 மீட்டர் தடைதாண்டுதல் பிரிவில் வெண்கல பதக்கம் என 4 பதக்கங்கள் வென்ற ஒலிம்பா ஸ்டெபிக்கு ரூ.6,50,000 காசோலை, 4X400 மீ (ஆண்கள்) ரிலே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் ஷரனுக்கு ரூ.1,50,000க்கான காசோலை, டிரிபிள் ஜம்ப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் தினேஷ்க்கு ரூ.1,50,000க்கான காசோலை, உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் ஆதர்ஷ் ராம்க்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை, நீளம் தாண்டுல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பவானியாதவ் பகவ்க்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை என தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற 7 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.15.50 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
இதுதவிர, 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் மெட்லி ரிலே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற எட்வினா ஜேசனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.25,00,000க்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். அந்த வகையில், பதக்கங்கள் வென்ற 8 விளையாட்டு வீரர், வீரங்கனைகளுக்கு மொத்தம் தொகை ரூ.40,50,000க்கான ஊக்கத்தொகை காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
