மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு பாராட்டு விழா நல்லவர்களை பாராட்ட தவறக்கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேச்சு
சென்னை: மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரன் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்து 75 ஆண்டுகளும், மூத்த வழக்கறிஞராக உயர்வு பெற்று 50 ஆண்டுகளும் ஆனதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்று பேசினார். அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி பேசினர்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பேசும்போது, ‘‘வழக்குகளில் ஆஜராகும் போது முழுமையாக தயாராக வேண்டும். பொறுமையாக வாதங்களை முன்வைக்க வேண்டும் போன்ற தகுதிகளை மூத்த வழக்கறிஞர் கே.பராசரனிடம் கற்றுக் கொண்டேன்’’ என்றார். உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த முக்கிய வழக்குகளில் மூத்த வழக்கறிஞர் பராசரனுக்கு முக்கிய பங்குள்ளது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் பராசரனின் வாழ்க்கை அனைவருக்கும் ஊக்கமளிக்கக் கூடியது என்று உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேசினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும்போது, ‘‘நீதித்துறையின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் உறுதி செய்தவர் பராசரன். தனது வாதத் திறமையால் பல்வேறு குறிப்பிடத்தக்க உத்தரவுகளை நாட்டுக்கு பெற்று தந்துள்ளார்’’ என்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி நரசிம்மா பேசும்போது, ‘‘பல வழக்கறிஞர்களின் தொழிலை முறையாக வடிவமைத்தவர் பராசரன். அவர் இந்த துறைக்கு மேலும் பல சாதனைகளை செய்து தர வேண்டும்’’ என்று வாழ்த்தினார். உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, ‘‘பராசரன் அலுவலகத்தில் சாதி, மதம் கிடையாது. அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதைதான். மூத்தவர் இளையவர் என்ற பாகுபாடும் கிடையாது. தர்மத்தை நிலை நாட்ட பயன்படும் கருவி தான் சட்டம். நல்லவர்களை பாராட்ட தவறக் கூடாது. தகுதியற்றவர்களை பாராட்ட கூடாது’’ என்று தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி விக்ரம் நாத் பேசும்போது, ‘‘எது நியாயம் எது சரி என்று தீர்மானிப்பதில் வல்லவராக நீதித்துறையின் பீஷ்மராக பராசரன் திகழ்கிறார். அவருடன் நெருங்கிய தொடர்பு இல்லையென்றாலும் அவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் நீதியை மட்டும் கடைபிடிப்பதில்லை மாறாக தர்மம், அறத்தை கடைபிடிக்க கூடியவர்’’ என பாராட்டினார். மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் பேசும்போது, ‘என் வாழ்நாளில் ஒவ்வொரு தவறுகளிலும் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். ஒவ்வொருவரும் அவர்களது கடமையைச் செய்தால் யாருடைய உரிமையும் பாதிக்காது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் வேறுபாடு கிடையாது. அரசியலமைப்பை காப்பதில் இரு நீதிமன்றங்களுக்கும் ஒரே அளவுகோல்தான் உள்ளது’ என்றார்.