Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

70 வயது பூர்த்தியடைந்த 200 மூத்த தம்பதிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: 70 வயது பூர்த்தியடைந்த 200 மூத்த தம்பதிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்." என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்டையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை இன்று (10.11.2025) தொடங்கி வைத்து, 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தார். இத்திட்டத்தின் கீழ். தமிழ்நாடு முழுவதும் 2,000 மூத்த தம்பதியினர் சிறப்பு செய்யப்படுகின்றனர். இத்தம்பதியினருக்கு 2,500 ரூபாய் மதிப்பிலான வேட்டி மற்றும் சட்டை, புடவை, இரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம். கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஆற்றிய உரை

70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதிகளுக்கு இங்கே சிறப்பு செய்கின்ற திட்டம். 2025-2026 ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே நம்முடைய சேகர்பாபு அண்ணன் ஒரு அறிவிப்பாக வெளியிட்டு, இன்றைக்கு அதை செயல்படுத்தி காட்டியிருக்கின்றார். சென்னை மண்டலங்களில் 200 மூத்த தம்பதிகளுக்கும். இதர மண்டலங்களிலிருந்து 631 மூத்த தம்பதிகள் என மொத்தம் இன்றைக்கு மட்டும் 831 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதிகளுக்கு ரூபாய் 2,500 மதிப்பிலான புத்தாடைகள், பழங்கள், மங்கலப் பொருட்கள் எல்லாம் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் கலந்து கொள்வதில் எனக்கு சிறப்பு, கூடுதல் மகிழ்ச்சி, மற்றற்ற மகிழ்ச்சி, ஏனென்றால் இந்த நிகழ்ச்சி நம்முடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெறுகின்றது. அதுமட்டுமல்ல 200 மூத்த ஜோடிகளில் 18 ஜோடிகள் நம்முடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்தவர்கள். இன்னும் பெருமையாக சொல்லவேண்டும் என்றால், இங்கே நான் ஒரு துணை முதலமைச்சராக வரவில்லை. விளையாட்டுத் துறை அமைச்சராக வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் சட்டமன்ற உறுப்பினராகவும் நான் வரவில்லை. உங்கள் பேரப்பிள்ளையாக வந்து உங்களுடைய வாழ்த்தை வாங்க வந்திருக்கின்றேன்.

அண்ணன் சேகர்பாபு . எப்படி நம்முடைய முதலமைச்சர் இன்றைக்கு இந்தியாவிலேயே நம்பர் 1 முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றிருக்கின்றாரோ, அதை செய்து காட்டியிருக்கின்றாரோ, அதேமாதிரி நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் நம்பர் 1 அமைச்சர் என்றால் நம்முடைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர்பாபு தான். எப்படியும் மாதத்திற்கு 3, 4 நிகழ்ச்சிகள் என்னை அழைத்து அவர் நடத்திவிடுவார்.

ஆயிரக்கணக்கான திருமணங்களை முதலமைச்சர் . என்னையும் வைத்து நடத்தியிருக்கின்றார். ஆனால், இந்த நிகழ்ச்சி, சற்றே வித்தியாசமான நிகழ்ச்சி. என்னால் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்ச்சி. அதையும் அண்ணன் சேகர்பாபு நடத்தி காட்டியிருக்கின்றார். அதற்கு இந்த நேரத்தில் அண்ணன் சேகர்பாபுவுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொதுவாக பையனுடைய திருமணத்தையும், பேரனுடைய திருமணத்தையும் வீட்டில் இருக்கக்கூடிய அப்பா, அம்மாவும், தாத்தா பாட்டியும்தான் அதற்கு முன்னிலை வகித்து, அதற்கு தலைமையேற்று நடத்தி வைப்பார்கள். ஆனால், இந்த பேரன், எனக்கு தாத்தா. பாட்டியினுடைய திருமணத்தை நடத்தி வைக்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அதுவும் மேடையில் எனது இடதுபுறமும், வலதுபுறமும் இருக்கக்கூடிய தம்பதிகள் என்னிடத்தில் கேட்டுதான் மாலையை மாற்றிக் கொண்டார்கள்.

தாத்தா பாட்டியின் அனுமதி வழங்கிதான் பையனோ, பேரனோ தாலியை கட்டுவார்கள். மாலை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் இந்த மேடையில் மட்டும் தான் பேரனிடம் அனுமதி வாங்கி தாத்தா பாட்டி மாலையை மாற்றி கொண்டார்கள். இன்னும் ஒரு சிறப்பு கீழே இருக்கக்கூடிய தம்பதிகள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் மாலையை மாற்றிக் கொண்ட அந்த காட்சியை நான் பார்த்தேன். எனவே மிகச்சிறந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நான் பேசுவதாக இல்லாமல் இருந்தது. ஆனால் இங்கு வந்து நான் பேசாமல் சென்றால் பேரன் வந்தானே பேசாமல் போய்விட்டானே என்று தாத்தா பாட்டிகளுக்கு கோபம் வந்துவிடும்.

நான் வாழ்த்த வரவில்லை, வாழ்த்துகளை பெற வந்திருக்கின்றேன். எனவே இந்த சிறப்பான நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்ட அத்தனைபேருக்கும் என்னுடையவாழ்த்துகள், வந்திருக்கக்கூடிய மூத்த தாத்தா பாட்டிகளுக்கு என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்து இந்த சிறப்பான வாய்ப்பை அளித்த சேகர்பாபு அண்ணனுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளாளர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் ஸ்ரீ ராமானுஜ எம்பார் சுவாமிகள், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், சுற்றுலா, பண்பாடு அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க. மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., மாநகராட்சி நிலை குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, ஆளுங்கட்சி துணைத் தலைவர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ், மண்டல குழுத் தலைவர் எஸ்.மதன் மோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து துணை முதலமைச்சர் , அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சார்பில் திருவல்லிக்கேணி, நல்லத்தம்பி தெருவில் 2.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை ஆணையர்/செயல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்புகளையும், பார்த்தசாரதி தெருவில் 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பினையும் திறந்து வைத்து வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.