கோபி: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என கடந்த 5ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் ஒருங்கிணைப்பு பணியை தொடர 10 நாட்கள் கெடு விதித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த நாளே கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கட்சி பதவிகளையும், அவரது ஆதரவாளர்களான மாஜி எம்பி சத்திய பாமா, ஒன்றிய செயலாளர்கள் தம்பி என்கிற சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன், ஈஸ்வரமூர்த்தி, அத்தனை பேரூர் கழக செயலாளர் ரமேஷ், பேரூர் கழக துணை செயலாளர் வேலு என்கிற மருதமுத்து உள்ளிட்ட 13 பேரை கட்சி பதவிகளில் இருந்தும், 2 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கோபியில் உள்ள தனியார் அரங்கில் கோபி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் தலைமையில் நடந்தது. அப்போது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதேபோன்று அந்தியூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நடந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் கட்சி பதவிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பறித்துள்ளார்.
அதன்படி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் பொருளாளர் கே.கே. கந்தவேல்முருகன், இணைச் செயலாளர் அனுராதா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் எஸ்.ஆர். செல்வம், இணைச் செயலாளர் கே.பி. சிவசுப்பிரமணியம், மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் கே.ஏ. மௌதீஸ்வரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் கொத்துக்காடு பெரியசாமி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்ஈ. கௌசல்யாதேவி துணைச் செயலாளர் வி.பி. தமிழ்செல்வி, மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பி. ராயண்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பி.யூ. முத்துசாமி, செயலாளர் கே. பிரகாஷ் பாலாஜி, மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் எஸ். அந்தோணிசாமி உள்ளிட்ட 40 பேரின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.