ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க கோரி 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பதவிகள் பறிப்பு: எடப்பாடி பழனிசாமி அதிரடி
* ஆதரவாளர்கள் 8 பேரின் பதவிக்கும் வேட்டு
சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்தது தொடர்பாக அதிமுக மூத்த தலைவர்களுடன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேரின் பதவியை பறித்தும் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்திலும், நேற்றும், இன்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் 5ம் தேதி மனம் திறக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்படி நேற்று முன்தினம் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது, ‘‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை (சசிகலா, ஓபிஎஸ், டிடிவி) மீண்டும் இணைக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தலைவர்களாக இருந்தபோது தங்களுக்கு எதிராக பேசியவர்களையும், புகார் கொடுத்தவர்களையும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டனர். இதேபோல, எடப்பாடி பழனிசாமியும் 10 நாட்களுக்குள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெல்ல முடியும்.
இது தொடர்பாக 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்காவிட்டால், நாங்களே முடிவு எடுப்போம்’’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார். செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் அணியில் உள்ள தலைவர்கள் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் பாஜ தூண்டிவிட்டுத்தான் செங்கோட்டையன் பேசுவதாக சந்தேகம் எழுப்பினர். எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன், ‘எடப்பாடியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என்று தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் மாஜி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அன்பழகன், தங்கமணி ஆகியோர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் தேனி, கம்பம் மற்றும் போடி பகுதிகளில் எடப்பாடி பிரசாரம் செய்ய சென்றபோது, அவரது வாகனத்தை முற்றுகையிட்டு, ‘வேண்டும்...வேண்டும்...அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்...’ என்று ஓபிஎஸ் அணியினர் மற்றும் அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். நேற்று முன்தினம் தேனி மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்த எடப்பாடி பழனிசாமி, இரவு திண்டுக்கல் வந்து தனியார் ஓட்டலில் தங்கினார். இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு தனியார் ஓட்டலில் அதிமுக மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோருடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக எடப்பாடி ஆலோசனை நடத்தினார். அப்போது, செங்கோட்டையனின் கருத்தை எடப்பாடி உள்ளிட்ட சிலர் ஏற்க மறுத்துவிட்டனர்.
‘‘செங்கோட்டையன் பேசுவது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி எனவும், பிரிந்து சென்றவர்களை இணைத்தால் மீண்டும் குழப்பம் ஏற்படும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செங்கோட்டையன் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி வருகிறார்’’ என எடப்பாடி கடுமையான குற்றச்சாட்டுகளை செங்கோட்டையன் மீது வைத்தார். மேலும், ‘‘உட்கட்சி விஷயங்களை பொதுவெளியில் பேசும் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி பேசினார். இதை ஆலோசனை கூட்டத்தில் இருந்த அனைத்து முன்னணி தலைவர்களும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் இன்று முதல் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இதேபோன்று, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி, கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.டி.குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.தேவராஜ், அத்தாணி பேரூராட்சி கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.எஸ்.ரமேஷ், துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேலு (எ) தா.மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.எஸ்.மோகன்குமார், பல்லடம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார். செங்கோட்டையன் பேட்டி கொடுத்து 24 மணி நேரத்தில் அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் நெருங்கிய ஆதரவாளர்கள் பதவி மட்டுமே பறிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏ, முன்னாள் எம்பி உள்ளிட்டோர் மீது எடப்பாடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் 8 பேர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் எம்பி வி.கே.சின்னசாமியின் மகனும் மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளருமான வி.கே.சிவக்குமார் தலைமையில் கோபி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் கங்காதரன், டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹரிபாஸ்கரன் உள்ளிட்டோர் கோபி பேருந்து நிலையம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள ஏ.கே.செல்வராஜூக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதே போன்று நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு திரண்ட ஈரோடு புறநகர் மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்ட மூர்த்தி மற்றும் மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
செங்கோட்டையனுக்கு பதில் புதிய மாவட்ட பொறுப்பாளர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை மாவட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஏ.கே.செல்வராஜ் (அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.