Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கோட்டையன் கதை முடிந்தது எஸ்ஐஆர் பணிகள் அவசியம்: எடப்பாடி பழனிசாமி வக்காலத்து

கோவை: செங்கோட்டையன் கதை முடிந்து போனது, எஸ்ஐஆர் பணி முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடந்து வருகிறது. பல சட்டமன்ற தொகுதிகளில் இறந்த வாக்காளர்களின் பெயர், வீடு இடமாற்றம் செய்தவர்களின் பெயர்கள் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று வருகிறது. இப்படி முறைகேடாக உள்ள வாக்காளர் விடுவிக்கப்பட்டு தகுதியான வாக்காளர்கள் இடம் பெற வேண்டும் என்பதால் எஸ்.ஐ.ஆர் பணி முக்கியம். எஸ்.ஐ.ஆர். பணியில் தவறுகள் இல்லை. தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அதனை அதிகாரிகள் சரிசெய்வார்கள்.

அதிமுகவை பொறுத்தவரை தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பது நிலைப்பாடு. அதனால் தான் எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரிக்கிறோம். எஸ்ஐஆருக்கு ஆதரவாக அதிமுக வழக்கு தொடர்ந்தது உண்மைதான். எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ள ஒரு மாதம் காலம் இருக்கிறது. 300 வீடுகள் இருக்கும் ஒரு பாகத்தில் வாக்காளர் படிவம் கொடுக்க 8 நாட்கள் போதும். இதற்கு முன்பு 8 முறை எஸ்ஐஆர் பணி நடந்துள்ளது. எஸ்ஐஆர் பணிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. எஸ்ஐஆர் குறித்து தவறான செய்தி பரவி வருகிறது.

மேலும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஜி.எஸ்.டி 2 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை உடனடியாக அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். திமுக-வால் அதிமுக பாஜவிடம் அடிமையாகிவிட்டது. கூட்டணி வைத்துவிட்டது என தான் கூற முடியும். எங்கள் கூட்டணி குறித்து அமித்ஷா தெளிவாக கூறியுள்ளார். இந்த கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும். அதிமுக தான் ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான் என அமித்ஷா தெளிவுப்படுத்தி உள்ளார். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

அதிமுகவில் குடும்ப ஆட்சி அதிகரித்து இருப்பதாகவும், உங்களின் மகன், மருமகன் தலையீடு இருப்பதாகவும் செங்கோட்டையன் குற்றம்சாட்டி இருக்கிறாரே என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி, ‘‘கோவையில் ஒரு நாளாவது பார்த்து இருக்கீங்களா?. இதுவரை யாராவது சொல்லி இருக்காங்களா?. இங்கிருந்து நீக்கப்பட்ட பல பேர் போய் இருக்காங்க. இப்படி யாராவது குற்றச்சாட்டு சொல்லி இருக்காங்களா?. அவருக்கு வேறு குற்றச்சாட்டு கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் தான் இதை கூறுகிறார்’’ என்றார். ‘‘அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைக்க பாஜ தான் கூறியதாக செங்கோட்டையன் கூறியுள்ளாரே’’ என்ற கேள்விக்கு ‘‘செங்கோட்டையன் கதை முடிந்த போனது. அவர் என் கட்சியில் இல்லை. அவரை பற்றி பேச வேண்டியதில்லை. முடிந்து போன விஷயம். அதனால் எவ்வித பயனும் இல்லை’’ என்றார்.