அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்: பாஜக முன்னாள் எம்எல்ஏவும் கட்சியில் சேர்ந்தார்
சென்னை: அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தார். அவருடன் முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தவெகவில் தஞ்சம் அடைந்தனர். பாஜக முன்னாள் எம்எல்ஏவும் கட்சியில் சேர்ந்தார். அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்தார். இதுவரை 9 முறை எம்எல்ஏவாக போட்டியிட்டுள்ளார். இதில் 8 முறை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
எடப்பாடி தலைமையில் இதுவரை நடைபெற்ற 11 முக்கிய தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளதை மறைமுகமாக சுட்டிக்காட்டி, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்ததுடன், அதற்கு காலக்கெடுவும் விதித்தார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனிடம் இருந்த கட்சி பதவிகளை பறித்தார். பின்னர் கடந்த மாதம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அவர், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். எனவே செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.
இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். அதனை உறுதிபடுத்தும் வகையில் செங்கோட்டையன் நேற்று காலை தலைமை செயலகம் வந்து தனது எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பின்னர் செங்கோட்டையன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். காரில் இருந்த அதிமுக கொடியையும் அகற்றினார். இதற்கிடையே தவெக தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டுக்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செங்கோட்டையன் தவெகவில் இணைவாரா? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று மாலை 4.35 மணிக்கு செங்கோட்டையன் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டுக்கு திடீரென்று சென்றார்.
அவரை ஆதவ் அர்ஜுனா தனது காரில் அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 2 மணி நேரம் விஜய் வீட்டில் இருந்தார். அதில் ஒன்னரை மணி நேரம் விஜய்க்காக காத்திருந்தார். கடைசியில் 30 நிமிடம் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இருவரும் மனம் விட்டு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர். அப்போது, தவெகவில் செங்கோட்டையனுக்கு வழங்கப்படும் பொறுப்பு உள்ளிட்டவைகளை குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தநிலையில் இன்று (வியாழன்) காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் விஜய்யுடன் செங்கோட்டையன் மட்டும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சரியாக இன்று காலை 11 மணிக்கு தவெக தலைவர் விஜய் பனையூர் கட்சி தலைமை அலுவலகத்தில் போடப்பட்டிருந்த மேடைக்கு வந்தார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முறைப்படி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தவெகவில் முறைப்படி இணைந்ததற்கு அடையாளமாக விஜய் செங்கோட்டையனுக்கு பொன்னாடை அணிவித்து, கட்சி துண்டு அணிவித்து, தவெக அடையாள அட்டை வழங்கினார். பதிலுக்கு செங்கோட்டையன் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சத்யபாமா உள்ளிட்ட அனைவரும் விஜய்க்கு பொன்னாடை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். பதிலுக்கு விஜய்யும் பொன்னாடை மற்றும் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். அப்போது சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த வெங்கடாச்சலம், தற்போது பாஜகவில் மாநில கூட்டுறவுப் பிரிவு செயலாளராக இருந்தார்.
நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்யாமல் திடீரென்று செங்கோட்டையனுடன் இணைந்து விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அப்போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செங்கோட்டையனுக்கு தவெகவில் உடனடி பதவி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தவெக அலுவலகத்திற்கு வந்த அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.க.-வில் இணைந்தனர். த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்பட்டது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பவுன்சர்கள் தொடர்ந்து அடாவடி: பத்திரிகை கேமராமேன் படுகாயம்
செங்கோட்டையனின் ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா, புதுச்சேரி முன்னாள் பாஜ தலைவர் சுவாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்எல்ஏ அசன்னா உள்பட 100க்கும் மேற்பட்டோர் தவெக தலைமை அலுவலகத்துக்கு இன்று காலையிலே வந்து காத்திருந்தனர். பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு, உள்ளே செங்கோட்டையன் சென்றார். அவரை பின்தொடர்ந்து படமெடுத்தபடி பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி காமிராமேன்களும் உள்ளே செல்ல முயற்சித்தனர். அப்போது, தவெக தலைமை அலுவலக பாதுகாப்பு பணிகளில் தனியார் நிறுவன பவுன்சர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி காமிராமேன்களை உள்ளே விட மறுத்து தள்ளிவிட்டனர்.
இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதங்களும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டுள்ளது. இதில் தனியார் தொலைக்காட்சி காமிராமேனை பவுன்சர்கள் தாக்கியதில், அவரது தலையின் பக்கவாட்டு பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதை பார்த்து பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி காமிராமேன்களும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தவெக நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா உள்பட பலர் வந்து, பத்திரிகையாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
கவலைப்படாத எடப்பாடி
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, ‘‘இது தேவையில்லாத கேள்வி. செங்கோட்டையன் தற்போது அதிமுகவில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல அவசியம் இல்லை. நன்றி, வணக்கம்”என்று கூறி விட்டு சென்றார். அவருடைய பதில் செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கியது குறித்தோ, அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தது குறித்தோ கொஞ்சம்கூட கவலை இல்லாமல் சளிக்காமல் பதில் அளித்ததாகவே இருந்தது. எடப்பாடியை பொறுத்தவரை, அதிமுக கட்சியில் தன்னை எதிர்ப்பவர்களை தொடர்ந்து வெளியேற்றுவதில் தற்போதும் உறுதியாக இருப்பதையே இது எடுத்துக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

