கோபி: செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டுப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த ஊரில் எடப்பாடி அதிர்ச்சி கொடுத்து உள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த 5ம் தேதி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதை தொடர்ந்து 6ம் தேதி அவர் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளையும், அதே போன்று அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட 13 பேரின் கட்சி பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார். கட்சியில் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து வந்தது எடப்பாடி பழனிசாமியை மேலும் ஆத்திரமடையச்செய்தது. இதனால் செங்கோட்டையனை நிரந்தரமாக கட்சியில் ஓரங்கட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சித்தோடு, கவுந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம் வழியாக நேற்று காலை சென்றார். அப்போது கோபி பேருந்து நிலையம் முன்பு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் ஏ.கே. செல்வராஜ், முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பணன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக வரவேற்பு என்பது ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் நேற்று வழக்கத்தை விட வேண்டுமென்றே அரை மணி நேரமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல வழக்கத்தை விட கூட்டமும் கூட்டப்பட்டிருந்தது.
அதே போன்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கவுந்தப்பாடியில் இருந்து கோபி வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழி முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு உள்ள நிலையில், அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதையும், செங்கோட்டையனின் சொந்த ஊரில் கூட அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதையும் காட்டுவதற்காக திட்டமிட்டு இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது செங்கோட்டையனின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
* கோர்ட் உத்தரவை ரத்து செய்வேன் எடப்பாடி பேச்சால் சர்ச்சை
மலை பிரதேசங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இ-பாஸ் நடைமுறையை அரசு செயல்படுத்தி வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்லவும் நவ.1-ம் தேதி முதல் இ-பாஸ் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறை பற்றிய முழுவிவரம் தெரியாமல், மாஜி முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, குன்னூரில் நேற்று நடந்த பிரசாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீலகிரிக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வோம் எனக்கூறியுள்ளார். ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்வேன் என்று எடப்பாடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
‘‘இது தமிழ்நாடு அரசு உத்தரவு அல்ல, நீதிமன்றத்தின் ஆணை..., ‘’நாட்டுல... என்னது நடக்குன்னே... மாஜி முதல்வருக்கு தெரியலையே...’’ என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
* தலைக்கு ரூ.300: பெண்கள் வாக்குவாதம்
எடப்பாடி பழனிசாமி நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் முன்பு பிரசார பயணம் மேற்கொண்டார். அப்போது போதிய அளவில் கூட்டம் இல்லை எனக்கூறி அதிமுக நிர்வாகிகள் சிலர் அங்குள்ள ஏடிஎம் மையத்தின் முன்பு முதியோர் உதவித்தொகை எடுக்க வந்த முதியோர்களிடம் தலா ரூ.300 கொடுப்பதாக கூறி கையில் அதிமுக கொடி கொடுத்து, கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். இதேபோல், ஆரத்தி எடுத்து எடப்பாடியை வரவேற்க ஒரு நபருக்கு ரூ.300 தருவதாக கூறி பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்களை கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், கூட்டம் முடிந்தவுடன் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க வைத்து பின்னர் பணம் கொடுத்தனர். இதனால் அதிமுக நிர்வாகிகளுடன் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.