முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் நாளை டெல்லி பயணம்: 2 நாள் நிகழ்ச்சியை ரத்து செய்தார், அமித்ஷாவை சந்தித்து பேச திட்டம்
சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் நாளை டெல்லி செல்ல உள்ளார். இதற்காக அவர் 2 நாட்கள் நிகழ்ச்சியை ரத்து ெசய்துள்ளார். டெல்லி செல்லும் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜ மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் கூட்டணி உறுதி செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு சிக்கல்களை இந்த கூட்டணி எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அண்மையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற வகையிலும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் அதற்கான பணிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார். மேலும், 10 நாள் கெடு விதித்திருந்தார். இதையடுத்து செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், கடந்த வாரம் டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அதன் பின்னர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்கள் அனைவரும், அதிமுகவில் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி 16ம் தேதி (நாளை) டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஏற்றார் போல, அவர் மேற்கொண்டு வரும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற மக்கள் பரப்புரை பயணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 17, 18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
மேலும் அமித்ஷா உள்ளிட்ட பாஜ முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எடப்பாடியின் இந்த பயணத்துக்கு, செங்கோட்டையன் டெல்லி பயணம் தான் அடிப்படை காரணம் என்று கூறப்படுகிறது. அண்மையில் டெல்லி சென்று விட்டு வந்த செங்கோட்டையன் அதிமுகவின் உள்கட்சி நிலவரம் தொடர்பாக அமித்ஷாவிடம் கூறியதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே, டெல்லி தலைமை அழைப்பு விடுத்ததன் பேரில், எடப்பாடி டெல்லி செல்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
டெல்லி செல்லும் அவரிடம் அமித்ஷா, அதிமுக உட்கட்சி நிலவரம் குறித்து கேட்டறிவார் என்று தெரிகிறது. மேலும், செங்கோட்டையன் வலியுறுத்தியதன் அடிப்படையில், அதிமுகவை ஒருங்கிணைக்கும் வகையில், அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களையும், அதிருப்தியில் இருப்பவர்களையும் இணைக்க வேண்டும் என்று அப்போது அமித்ஷா வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுகவை ஒன்றிணைத்தால் தனது தலைமைக்கு ஆபத்து வந்து விடும் என்று அச்சத்தில் எடப்பாடி இருந்து வருகிறார். இதனால், பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி இசைவு கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், எடப்பாடியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
* சி.பி.ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு
இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். அவருடன் மூத்த நிர்வாகிகளும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.