செங்கோட்டையனை தொடர்ந்து மேலும் 2 மாஜிக்கள் போர்க்கொடி தூக்க திட்டமா? அதிமுகவில் நடப்பது என்ன? பரபரப்பு தகவல்கள்
கோபி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து, ஆர்எஸ்எஸ், பாஜக ஆதரவுடன் எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் போர்க்கொடி தூக்க திட்டமிட்டுள்ளனர். ஓரிரு நாளில் அவர்கள் பிரச்னையை கிளப்புவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பயணம் மேற் கொண்டு வருகிறார். நேற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொண்டார். இன்றும் திண்டுக்கல்லில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த 5ம் தேதி மனம் திறக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்படி நேற்று முன்தினம் கோபி செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது, ‘‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை (சசிகலா, ஓபிஎஸ், டிடிவி) மீண்டும் இணைக்க வேண்டும். எம்ஜிஆர். ஜெயலலிதா ஆகியோர் தலைவர்களாக இருந்த போது தங்களுக்கு எதிராக பேசியவர்களையும், புகார் கொடுத்தவர்களையும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டனர். இதேபோல, எடப்பாடி பழனிசாமியும் 10 நாட்களுக்குள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போது தான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெல்ல முடியும். இது தொடர்பாக 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கவேண்டும்.
10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்காவிட்டால், நாங்களே முடிவு எடுப்போம்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார். செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா, பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் அணியில் உள்ள தலைவர்கள் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள், பாஜ தூண்டிவிட்டுத்தான் செங்கோட்டையன் பேசுவதாக சந்தேகம் எழுப்பினர். எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் ‘எடப்பாடி யின் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என்று தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் மாஜி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார். அன்பழகன், தங்கமணி ஆகியோர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் தேனி, கம்பம் மற்றும் போடி பகுதிகளில் எடப்பாடி பிரசாரம் செய்ய சென்றபோது, அவரது வாகனத்தை முற்றுகையிட்டு, ‘வேண்டும்..வேண்டும். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்’ என்று ஓபிஎஸ் அணியினர் மற்றும் அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். நேற்று முன்தினம் தேனி மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்த எடப்பாடி பழனிசாமி, இரவு திண்டுக்கல் வந்து தனியார் ஓட்டலில் தங்கினார். இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு தனியார் ஓட்டலில் அதிமுக மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோருடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘செங்கோட்டையன் பேசுவது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி; பிரிந்து சென்றவர்களை இணைத்தால் மீண்டும் குழப்பம் ஏற்படும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செங்கோட்டையன் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி வருகிறார் என்று செங்கோட்டையன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைத்தார். மேலும் உட்கட்சி விஷயங்களில் பொது வெளியில் பேசும் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’, என்றார். இதையடுத்து அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலும் இருந்து செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். மேலும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான நம்பியூர் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், அத்தாணி பேரூர் கழக செயலாளர் ரமேஷ், துணைச்செயலாளர் மருதமுத்து, பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் உள்ளிட்ட 8 பேரை கட்சி பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நேற்று விடுவித்தார். செங்கோட்டையன் பேட்டி கொடுத்து 24 மணி நேரத்தில் அவரையும் ஆதரவாளர்கள் 8 பேரையும் அதிமுக பொறுப்புகளிலிருந்து நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து செங்கோட்டையன் நேற்று கோபியில் உள்ள தன் வீட்டில் பேட்டிளித்தார். அப்போது, ஜனநாயகப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் விளக்கம் கேட்காமலேயே கட்சியிலிருந்து என்னை விடுவித்து இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும்’ என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், செங்கோட்டையனை போனில் தொடர்பு கொண்டு பேசினார். பெங்களூரு புகழேந்தி செங்கோட்டையனை நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில் நேற்று இரவு செங்கோட்டையனை போனில் தொடர்பு கொண்ட முக்கிய அரசியல் புள்ளி ஒருவரிடம், ‘‘வருகிற 9ம் தேதி (செவ்வாய்கிழமை) தொலைக்காட்சியை பாருங்கள், என்ன நடக்கிறது என்று தெரியும்’’ என்று கூறியதாக தெரிகிறது. ‘‘கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்தாலும், ஒருங்கிணைப்பு பணி தொடரும்’’ என்று கடந்த 5ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில் ‘‘9ம் தேதி வரை காத்திருங்கள் என்று கூறி உள்ளது’’ அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் செங்கோட்டையனை பின்புலத்தில் இருந்து இயக்குவது ஆர்எஸ்எஸ் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக உள்ளார். அவரை தங்கள் விருப்பப்படி வளைக்க முடியவில்லை. தேர்தல் நேரத்தில் சீட் விவகாரத்திலும் அவர் பிடிவாதமாக நடந்து கொள்கிறார். இதனால் அவரை தங்கள் விருப்பப்படி வளைக்க வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவில் இருந்தால்தான், அவர்கள் மூலம் கட்சியை தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்க முடியும் என்று பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கருதுகிறது. இதனால் அவர்களை எப்படியாவது கட்சிக்குள் கொண்டு வர திட்டமிட்டு, தேர்தலில் வெற்றி பெற அவர்கள் கண்டிப்பாக வேண்டும்.
அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைவர் தான் செங்கோட்டையன். அதனால் தான் அவர் தற்போது வாய்ஸ் கொடுத்துள்ளார். செங்கோட்டையன் பேட்டியின் போது 6 முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினோம் என்றும் கூறியுள்ளார். அதில் நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், அன்பழகன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் இருந்தனர். இதில் நத்தம் விஸ்வநாதனுக்கு லோக்கலில் மட்டும் தான் செல்வாக்கு உள்ளது. மற்றபடி பெரிய அளவில் செல்வாக்கு எதுவும் இல்லை. சி.வி.சண்முகத்துக்கு விழுப்புரத்தை தாண்டினால் அவருக்கு செல்வாக்கு இல்லை. அதே போல அன்பழகனுக்கு தர்மபுரியில் மட்டும் தான் செல்வாக்கு உள்ளது. மீதியிருப்பது தங்கமணி, எஸ்.பி.வேலுமணி தான். இவர்கள் தான் விரைவில் பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்குவார்கள் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் இவர்கள் இரண்டு பேரின் குடுமி பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் சொல்லும் வார்த்தைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள்.
இவர்கள் 2 பேரும் தான் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். அதனால் தான் எடப்பாடி வேறு வழியில்லாமல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க சம்மதம் தெரிவித்தார். இவர்கள் 2 பேர் மூலம் மீண்டும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்ற பிரச்னையை ஓரிரு நாளில் எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதை மனதில் வைத்து தான் 9ம் தேதி நடப்பதை பாருங்கள் என்று செங்கோட்டையன் அதிரடியாக சவால் விடுத்துள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவில் மீண்டும் பூகம்பம் வெடிக்கும் என்று தெரிகிறது. இதனால், வரும் நாட்களில் அதிமுகவில் பிரச்னைக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.