அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்: ஓரிரு நாட்களில் முக்கிய பதவி வழங்கப்படும் என தகவல்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனுடன் அவரது ஆதரவாளர் சத்தியபாமா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்.
செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படலாம் எனவும் செங்கோட்டையனுக்கு 4 மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்படும். புஸ்ஸி ஆனந்துடன் செங்கோட்டையன் இணைந்து செயல்படுவார் எனவும் விஜய்யுடன் நேரடியாக செங்கோட்டையன் தொடர்புகொள்வார், தகவல்களை அளிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்எல்ஏ பதவியை நேற்று காலையில் ராஜினாமா செய்த செங்கோட்டையன் நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து இன்று தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977ம் ஆண்டு முதல் 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன்பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அமைப்பு செயலாளராக அவர் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் செங்கோட்டையன் விரக்தியில் இருந்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்த தன்னை எந்தவித கேள்வியும் கேட்காமல் கட்சியைவிட்டே எடப்பாடி நீக்கி விட்டதாக தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வந்தார். எடப்பாடியை பழிவாங்க ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வியூகங்களை செங்கோட்டையன் வகுத்து வந்தார்.
இதை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி அவருக்கு பதிலடி கொடுக்க முடிவெடுத்தார். அதனால், கோபிசெட்டிபாளையத்திலேயே அதாவது செங்கோட்டையன் தொகுதியிலேயே வருகிற 30ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என்று கட்சி தலைமை அறிவித்தது. இதனால் செங்கோட்டையன் இன்னும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.
தன்னுடைய சொந்த ஊரில் எடப்பாடி பலம் காட்டுவதால், அதற்கு முன்னதாக தான் அதிரடியாக எதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து நடிகர் விஜய் கட்சியில் இணைய செங்கோட்டையன் முடிவு செய்தார். இதற்காக அவர் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று பகல் 11.45 மணிக்கு சென்னை தலைமைச்செயலகம் வந்த செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை செங்கோட்டையன் அவரது ஆதரவாளர்கள் சிலருடன் சென்னை, பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்றார்.
சுமார் 2 மணி நேரம் விஜய் வீட்டில் செங்கோட்டையன் இருந்தார். அதில் ஒரு மணி நேரம் வழக்கம்போல காத்திருந்தார். பின்னர் ஒரு மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. தவெக கட்சியில் இணைந்தால், தனது எதிர்காலம் மற்றும் தனது ஆதரவாளர்கள் நிலை என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இணைப்புக்கு நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்த நிலையில், இன்று நடிகர் விஜய் முன்னிலையில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அதிமுக எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் செங்கோட்டையன் இணைந்தார். செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய 3 அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 61 ஆக குறைந்தது. இதைத்தொடர்ந்து வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த ஜூன் 21ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். நேற்று கோபிசெட்டிபாளையம் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தற்போது அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 59 ஆக குறைந்துள்ளது.

