ஓபிஎஸ், சசிகலா உள்பட பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்; எடப்பாடிக்கு 10 நாள் கெடு: நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியாக முடிவெடுப்போம் என செங்கோட்டையன் மிரட்டல்
கோபி: ஓபிஎஸ், சசிகலா உள்பட பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்துள்ளார். அதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியாக முடிவெடுப்போம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறார்.
கட்சியில் தனக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைந்து வருவதும், மற்றொரு முன்னாள் அமைச்சரான கருப்பணனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் செங்கோட்டையன் மனதை பாதித்தது. ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் தனது கவனத்துக்கே வராமல் நிர்வாகிகள் நியமிக்கப்படுவதும் செங்கோட்டையனுக்கு தலைமை மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஈரோடு மாவட்ட ஐடி விங் மாவட்ட நிர்வாகியாக மோகன்குமாரை நியமிக்கும்படி செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆனால், அவரது எதிரணியை சேர்ந்த மகேஷ்ராஜாவை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டது செங்கோட்டையனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் எடப்பாடிக்கு எதிரான மன நிலையிலேயே அவர் இருந்து வந்தார். பிரிந்து கிடக்கும் அதிமுக முக்கிய தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும், பாஜவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற மன நிலையில் செங்கோட்டையன் இருந்தபோதும், கட்சி தலைமை அதற்கு செவி சாய்க்காமலேயே இருந்து வந்தது. இதையடுத்து டெல்லிக்கு சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாகவே அதிமுக-பாஜ கூட்டணி அமைந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் மவுனம் காத்து வந்த செங்கோட்டையன் செப்டம்பர் 5ம் தேதி பத்திரிகையாளர்களிடம் மனம் திறந்து பேச இருப்பதாக கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த 3 நாட்களாக பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டபோதெல்லாம், நிருபர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் செங்கோட்டையன் அளித்த பதில், ‘‘5ம் தேதி பதில் சொல்கிறேன்’’ என்பதாகத்தான் இருந்தது. இதனால் அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார், அவர் கூறப்போவது என்ன என்பது குறித்து பலவிதமான எதிர்பார்ப்புகள் நிலவியது.
இந்நிலையில், கோபியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று அதிகாலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஈரோடு-கோபி சாலையின் இரு பக்கத்திலும் திரண்டு நின்றனர். இந்நிலையில் காலை 9.25 மணி அளவில் செங்கோட்டையன் குள்ளம்பாளையத்தில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படம் வைக்கப்பட்ட திறந்த பிரசார வேனில் ஏறிய அவர் வீட்டில் இருந்து ஈரோடு-கோபி சாலையில் ரோடுஷோ நடத்தினார். அப்போது அங்கு நின்ற ஆதரவாளர்கள் அவரை வரவேற்று கோஷமிட்டனர். அவர்களது வரவேற்பை ஏற்றவாறு செங்கோட்டையன் கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
1972ல் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். 1977ல் நான் கோபியில் போட்டியிட முடிவு செய்தபோது, சத்தியமங்கலத்தில் என்னை எம்ஜிஆர் போட்டியிட சொன்னார். சத்தியமங்கலம் எனக்கு புதிய இடம் என்று கூறினேன். எனது பெயரை உச்சரித்தால் வெற்றி பெறுவாய் என்றார். கோவை செழியன், எஸ்டிஎஸ் போன்றவர்கள் இயக்கத்தில் இருந்து வெளியே சென்றபோது அவர்கள் இல்லத்துக்கே சென்று வாருங்கள் என்று அழைத்தவர் எம்ஜிஆர். தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் முதல்வராக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமையாக ஜெயலலிதா இருந்தார்.
ஜெயலலிதா மறைந்து ஓராண்டுக்கு பிறகு இந்த இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வருகிறபோது, சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தோம். மீண்டும் முதல்வரை நியமிக்க வேண்டி வந்தபோது முன்னாள் முதல்வரை (எடப்பாடி) நியமித்தோம். இந்த இயக்கத்தில் பல்வேறு தடுமாற்றங்கள் வருகிறபோது, என்னுடைய பணிகளை ஜெயலலிதா பாராட்டினார். இந்த இயக்கத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டு பல பணிகளை நான் ஆற்றி இருக்கிறேன்.
தமிழகம் எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எப்படி செழிப்போடு வாழ வேண்டும்? இந்த இயக்கத்தில் தொண்டர்கள் சிறப்பாக வாழ தியாகம் செய்ய தயாராக இருந்தேன். அப்போது இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. இயக்கம் உடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டேன். இதை நம்பி இருக்கிறவர்கள் எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்ய இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட வேண்டும்.
2016க்கும் பிறகு தொடர்ந்து தேர்தல்களை சந்திக்கிறோம். 2019 தேர்தல், 2021 தேர்தல், உள்ளாட்சி தேர்தல் சந்திக்கிறபோது பிரச்னைகள் உருவானது. 2024 தேர்தலை சந்தித்தோம். தேர்தல் முடிந்த பிறகு கழக பொதுச்செயலாளரை சந்தித்தோம். கழகம் தொய்வாக இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகிய 6 பேரும் பொதுச்செயலாளரை சந்தித்து பேசினோம். கருத்துக்களை கேட்ட அவர், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
இதை எதற்காக சொல்கிறோம் என்றால், வெளியில் சென்றவர்களை (ஓபிஎஸ், சசிகலா) அரவணைத்தால் மட்டும்தான் வெற்றிபெற முடியும். அவர்கள் வைக்கின்ற வேண்டுகோள் கட்சியில் இணைவதற்கு எந்த கண்டிஷனும் இல்லை என்கின்றனர். எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். என் நிலையில்தான் எல்லோரும் இருக்கிறார்கள். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அதை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்றால்தான் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வேன்.
பொதுச்செயலாளர் (எடப்பாடி) பிரசார பயணத்திற்கு வருகின்ற கூட்டம் வேறு, பல்வேறு தரப்பட்ட தொண்டர்களின் மனநிலை வேறு. யாரை இணைப்பது என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம். வெளியே சென்றவர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். அவரை இணைக்க வேண்டும் என்று சொல்கிறேன். அனைவரையும் ஒன்றிணைக்காவிட்டால் தென்மாவட்டங்களில் அதிமுக பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
ஆறு பேர் பேசியதற்கு பிறகு, தலைமை இது குறித்து எங்களை அழைத்து பேச முன்வரவில்லை. எல்லோரையும் ஒருங்கிணைக்கும்போதுதான் கட்சி வலுவாகும். 10 நாட்களில் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும். 10 நாட்களில் ஒன்றிணைக்காவிட்டால் நாங்களே முடிவு எடுப்போம். எனது நெருங்கிய நண்பர்களை கலந்து பேசிய பிறகு அடுத்த கட்ட முடிவு செய்வேன். இயக்கத்துக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் வருகிறது. எனவே செங்கோட்டையன் 10 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது அதை மையப்படுத்தி என கூறப்படுகிறது.
* ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் எடப்பாடி
2011 மற்றும் 2016 ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் இடம் பெறாதது குறித்தும், 3 முறை அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்தும் செய்தியாளர்கள் கேட்ட போது பதிலளித்த செங்கோட்டையன், 2009ம் ஆண்டு அவர் (எடப்பாடி பழனிசாமி) ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியுமா? என்றார்.
* யாரை சந்தித்தேன் என்பது சஸ்பென்ஸ்
உங்களை போன்ற அதிருப்தி மனநிலையில் உள்ளவர்களை சந்தித்து பேசி உள்ளீர்களா என்று செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ‘இதே கருத்தில் உள்ளவர்களை நான் சந்தித்து பேசினேனா என்பது சஸ்பென்ஸ்’ என்றார்.
* ஊழல் புகார் கூறியவர்களை கட்சியில் சேர்த்தவர் எம்ஜிஆர்
எடப்பாடி தலைமையை பிடிக்காமல் குறை கூறிய ஓபிஎஸ் போன்றவர்களை இணைப்பது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தாதா என்ற நிருபர்களின் கேள்விக்கு, ‘‘எஸ்.டி.எஸ் மற்றும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநரிடம் ஊழல் குற்றச்சாட்டை கொடுத்த போதும், வாருங்கள் இணைந்து பணியாற்றலாம் என்று எம்ஜிஆர் கூறினார். இவர்கள் அப்படியா செய்தார்கள்?. மறப்போம்...மன்னிப்போம்... என்ற ரீதியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்’’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
* எம்எல்ஏ புறக்கணிப்பு
செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்பட்ட பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, கடந்த மூன்று நாட்களுக்கு முன் கோபியில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் நேற்று செங்கோட்டையன், பேட்டி அளித்த போது கலந்து கொள்ளவில்லை. அதே போன்று முன்னாள் எம்பி., கே.கே.காளியப்பனும் கடந்த 5 நாட்களாக செங்கோட்டையனுடன் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
* எடப்பாடி பெயரை உச்சரிக்கவில்லை
கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி பெயரை செங்கோட்டையன் உச்சரிக்கவில்லை. அதற்கு பதிலாக அவரது பதவியான பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் என்று மட்டுமே குறிப்பிட்டு பேசினார். இதே போல செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் பேட்டி முடிந்ததும், செங்கோட்டையன் படத்துடன் கூடிய ஆளுயர பேனரை எடுத்துக்கொண்டு வந்தனர். அதில் எம்.ஜிஆர், ஜெயலலிதா படம் மட்டுமே இருந்தது, எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெறவில்லை.
* செல்லூர் ராஜூ ‘ஜூட்’
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள வஉசி சிலைக்கு அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை அணிவித்தார். அவரிடம் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென செங்கோட்டையன் அளித்துள்ள பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘தியாகிக்கு மரியாதை செய்ய வந்துள்ளோம். அவரது புகழைப்பற்றி பேசலாம். மற்ற விஷயம் தேவையில்லை’’ எனக் கூறியவாறு அங்கிருந்து காரில் ஏறி கிளம்பி சென்றார்.
* ஓபிஎஸ் அணி திடீர் சந்திப்பு
செங்கோட்டையன் பேட்டி அளித்த பிறகு நேற்று மாலை ஓபிஎஸ் அணி, அதிமுக உரிமை மீட்பு குழுவை சேர்ந்த திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள வீட்டில் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் கூறுகையில், ‘இன்று செங்கோட்டையன் எடுத்த முன்னெடுப்பை வரவேற்கிறோம். அதனால் அவருக்கு வாழ்த்து சொல்லி அவருக்கு உறுதுணையாக இருப்பதற்காக அவரை சந்தித்துள்ளோம். அவரை பார்ப்பதற்காக நாங்களாகவே வந்துள்ளோம். ஓபிஎஸ் குரலை தற்பொழுது செங்கோட்டையன் பிரதிபலிக்கிறார். 10 நாட்களில் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறோம். செங்கோட்டையன் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்பாரா? என தெரியாது.
ஆனால் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கின்றோம். எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் நிறைய பேர் இதே மனநிலையில் இருக்கின்றனர். சாதாரண தொண்டனுக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. 2026 தேர்தலில் அதிமுக ஒருங்கிணைந்து போட்டியிட்டால் வெற்றி பெறும்’ என்றனர்.
* எடப்பாடியின் வாகனத்தை ஓபிஎஸ் அணியினர் முற்றுகை
தேனியில் இருந்து கம்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் நேற்று மாலை புறப்பட்டு சென்றார். பிரசார வாகனம் உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பெண்கள் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கையில் கொடி, பேனர்களுடன் திரண்டிருந்தனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தை முற்றுகையிட்ட அவர்கள், ‘‘அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்’’ என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்தவர்கள், அவர்களை அப்புறப்படுத்தினர். இதேபோல், போடியில் பிரசாரத்திற்கு செல்லும்போது, அரசு பொறியியல் கல்லூரி அருகே எடப்பாடியின் வாகனத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள், முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை தடுத்து அனுப்பி வைத்தனர்.