Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பல தேர்தல்களில் தோல்வி ரூ.1 கோடி கொடுத்து இபிஎஸ் 5 ஆயிரம் பேரை கூட்டினார்: செங்கோட்டையன் பேச்சு

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே கரட்டுப்பாளையத்தில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: 1972-ல் எம்ஜிஆர் வழியில் வந்தவன் நான். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நின்று அனைவரும் பணியாற்றினோம். ஆனால், 50 ஆண்டு காலம் உழைத்த என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார்கள்.

இனி என்னுடைய பயணம் விஜய்யுடன். ஒரு நாள் ஒருவரை ஏமாற்றி விடலாம் பல நாள் ஏமாற்ற முடியாது.கடந்த மாதம் 9ம் தேதி, கோபியில் நடைபெற்ற கூட்டத்தில் செங்கோட்டையன் பின்னால் யாரும் இல்லை என்று சொன்னார்கள். தற்போது பாருங்கள் எவ்வளவு கூட்டம் என்று. என்னை அதிமுகவிலிருந்து நீக்குவது மட்டுமல்ல, இடர்பாடுகளை உருவாக்க சிலர் கனவு கண்டார்கள். செங்கோட்டையன் இனி மேலே வர முடியாது என்று நினைத்தார்கள்.

அன்றைக்கு (கடந்த 30ம் தேதி எடப்பாடி பிரசாரம்) கூடிய கூட்டம், 5,000 பேரை கூட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் செலவு. ஆனால், ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் இன்று 5000 பேர் இங்கு உள்ளீர்கள். அன்று திருப்பூர், சேலம், கோவை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூட்டத்தை கூட்டி வந்தார்கள். ஆனால், இங்கு உள்ளவர்களின் சக்தி என்ன என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நீங்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் முறியடிக்க முடியும். மாற்றிக் காட்ட முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தயவால் ஆட்சியில் அமர்ந்தவர்கள், பல முறை தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. வரும் 16ம் தேதி ஈரோட்டில் நடைபெறுகிற கூட்டத்தை (விஜய் பொதுக்கூட்டம்) பார்த்துவிட்டு கொங்கு மண்டலமே அதிர போகிறது என்ற வரலாற்றை படைப்போம். எல்லோரும் நினைக்கிறார்கள், கடலிலே தள்ளி விட்டதாக சொன்னார்கள். ஆனால், நான் கப்பலில் ஏறி வந்து விஜயை சந்தித்து விட்டேன். இனி யாராலும் தடுக்க முடியாது. சாய்க்க நினைப்பவர்கள் சாய்ந்து போவார்கள் இவ்வாறு அவர் பேசினார்.

* விஜய் கட்சி சின்னம்

செங்கோட்டையன் பேசுகையில், மிக விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப்போகிறது, அது எனக்குத் தெரியும், ஆனால் அதை வெளியே சொல்ல கூடாது. அந்த சின்னத்தைப் பார்த்ததற்கு பிறகு தான், நாடே வியக்கப் போகிறது. நாடு அஞ்சப் போகிறது என்றார்.

* எடப்பாடிக்கு பிள்ளையார் சுழி இல்லை வேறு சுழி

‘நாமக்கல் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தவெக கொடியை அசைத்து பாருங்கள், பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள் என்று (எடப்பாடி) சொன்னார்கள். இப்போது பிள்ளையார் சுழி அல்ல வேறு சுழி போடப்பட்டுள்ளது.எல்லோருடைய முதுகிலும் ஏறி சவாரி செய்து விடலாம் என்று கனவு கண்டார்கள். காற்றை சுவர் எழுப்பி தடுத்துவிட முடியாது. கடலை அணை போட்டு தடுத்துவிட முடியாது. இமயத்தை எறும்புகளால் தேய்த்து விட முடியாது’ என்று செங்கோட்டையன் கூறினார்.