செங்கோட்டையன் தவெகவில் இணைந்த விவகாரம்; அவர் அதிமுகவில் இல்லை கருத்து கூற ஒன்றுமில்லை: எடப்பாடி பழனிசாமி பம்மல்
மதுரை: செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த நிலையில், அதிமுகவில் இல்லாத அவரைப்பற்றி கருத்து கூற ஒன்றுமில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தார். நிகழ்ச்சி முடிந்து கிளம்பிய எடப்பாடி பழனிசாமியிடம், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அவர் அதிமுகவில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை. நன்றி வணக்கம்’’ எனக் கூறியவாறு கிளம்பினார்.
பின்னர் விமான நிலையம் செல்லும் வழியில் தனியார் தங்கும் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அங்கு மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, உதயகுமார், வளர்மதி, ராஜலட்சுமி மற்றும் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ ஆகியோருடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது குறித்தும், அடுத்தபடியாக மேற்ெகாள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியிடம், நிருபர்கள், ‘‘நான் என்று நினைப்பவர்களை ஆண்டவன் தண்டிப்பார் என செங்கோட்டையன் கூறியுள்ளாரே’’ என கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘‘ஆண்டவன் தண்டிப்பார் என செங்கோட்டையன் கூறியது அவருடைய கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. உங்களுக்கும், எனக்கும் ஒரு கருத்து உள்ளது. அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. இது ஜனநாயக நாடு. ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவர் அதிமுகவில் இல்லை. அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை’’ என்றார்.

