Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓபிஎஸ், சசிகலா, டிடிவியுடன் சேர்ந்து புதிய அணி? எடப்பாடி அனுப்பிய தூதுக்குழுவை சந்திக்க செங்கோட்டையன் மறுப்பு: நாளை பத்திரிகையாளர்களிடம் மனம் திறக்கிறார்

கோபி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி அமைத்த தூதுக்குழுவை சந்திக்க மறுத்துவிட்டார். திட்டமிட்டபடி நாளை தனது கருத்தை பிரதிபலிப்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 6 மாதமாக அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனால் எடப்பாடியை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். எடப்பாடி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மறைமுகமாகவும் செயல்பட தொடங்கினார். இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியில் செங்கோட்டையனுக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்தார். இதனால் செங்கோட்டையனின் அடுத்த கட்ட முடிவு என்ன? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5ம் தேதி (நாளை) செங்கோட்டையன் மனம் திறக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து நேற்றுமுன்தினம் கோபியில் உள்ள கட்சி அலுவலகம் வந்த செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியை பலப்படுத்தவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து ஓரணியாக சேர்ப்பது குறித்தும் செங்கோட்டையன் தனது கருத்தை ஆதரவாளர்களிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேறி சசிகலா, ஓபிஎஸ், டிடிவியுடன் சேர்ந்து புதிய அணி உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நாளை தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

செங்கோட்டையனின் திடீர் போர்க்கொடி தொடர்பாக நேற்றுமுன்தினம் மதுரை ஓட்டலில் இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, ‘பிரசாரக் கூட்டத்தில் பதில் அளிக்கிறேன்’ என கூறியிருந்தார். ஆனால் பிரசார கூட்டத்தில் இதுதொடர்பாக பதிலளிக்காமல் பின்வாங்கினார். இந்நிலையில் செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் வகையில், தனக்கு நெருக்கமாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரை கொண்ட ஒரு தூதுக்குழுவை அனுப்பி பேச்சுவார்தை நடத்த எடப்பாடி பழனிசாமி முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த தூதுக்குழு நேற்று செங்கோட்டையனை சந்திப்பாகவும் இருந்தது. ஆனால் தூதுக்குழுவை சந்திக்க செங்கோட்டையன் மறுத்துவிட்டதாகவும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கோபியில் நேற்று செங்கோட்டையனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது, ‘‘எடப்பாடி தரப்பில் இருந்து யாராவது பேசினார்களா?’’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், ‘‘5ம் தேதி சொல்கிறேன்’’ என்றார். தொடர்ந்து அவர் கூறும்போது, ‘‘5ம் தேதி பத்திரிகையாளர்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அந்த சந்திப்பு கட்சி அலுவலகத்தில் மட்டும் தான் நடைபெறும். திருமண மண்டபத்தில் இல்லை. 5ம் தேதி காலை 9 மணிக்கு அந்த கூட்டம் நடைபெறுகிறது.

கட்சியில் இருந்து வேறு யாரையும் வர வேண்டாம் என கூறிவிட்டேன். அன்றைய தினம் என்னுடைய கருத்துக்களை நான் தெரிவிக்கிறேன். என்னுடைய கருத்தை பிரதிபலிக்கப்போகிறேன். நான் இதுவரை வேறு யாரையும் சந்திக்கவில்லை. நிறைய திருமணங்கள் இருக்கிறது. திருமணங்களுக்கு சென்று கொண்டிருக்கிறேன். 5ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் வருவார்கள் என்பது எனக்கு தெரியாது. நேற்றுமுன்தினம் கூட யாருக்கும் தகவல் தெரிவிக்காத நிலையில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர்’ என்றார்.

செங்கோட்டையனின் திட்டம் தான் என்ன?

கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். குறிப்பாக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது செங்கோட்டையனின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதுதொடர்பாக ஏற்கனவே சேலத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்து பேசியும் பலனில்லை. இனியும் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளாவிட்டால் அதிமுகவில் இருந்து வெளியேறி தனி அணி அமைத்து பிரிந்து சென்றவர்களுடன் இணைந்து செயல்படுவது என்பது செங்கோட்டையனின் நிலைப்பாடாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு ஒரு முடிவை செங்கோட்டையன் எடுத்தால் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.

10 ஆயிரம் பேரை திரட்ட உத்தரவு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நாளை மறுநாள் (5ம் தேதி) பத்திரிகையாளர்களிடம் மனம் திறக்க உள்ளதாக கூறியுள்ளார். அப்போது தன்னுடைய ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினரை திரட்ட செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே அந்த நிகழ்வில் அதிமுகவினர் அதிகமானோர் திரள்வார்கள் என தெரிகிறது.

முன்னாள் எம்பி ஆதரவு

கோபியில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் செங்கோடடையனின் ஆதரவாளரான முன்னாள் எம்பி சத்தியபாமா கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்த நிலையில், நேற்று செங்கோட்டையன் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சத்தியபாமா கூறுகையில், ‘கடந்த 15 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், முதல்நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. 5ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கட்டாயமாக கலந்து கொள்வேன். கட்சி நலன் சார்ந்தும், 2026ம் ஆண்டு தேர்தல் வெற்றியை நோக்கியும் பயணிக்க வேண்டும் என்பது எனது கருத்து. எனக்கு முன் மூத்த நிர்வாகிகள் கட்சியில் பலர் உள்ளனர். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நினைக்கிறார். கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது குறித்து தலைவர்கள் எடுக்கும் முடிவு. கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடன் நான் இருப்பேன் என்றார்.