Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கோட்டையனை பாஜ இயக்குகிறதா?

* ப.சிதம்பரம், முன்னாள் ஒன்றிய அமைச்சர்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது. அதேபோல் எதிர் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு முயற்சி நடக்கும். ஏனென்றால் தமிழ்நாட்டில் பாஜ நுழைந்திருக்கிறது. பாஜவோடு கூட்டணியில் உள்ள அதிமுக வாக்குத்திருட்டை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களோடு உள்ள பாஜவிற்கு வேலையே வாக்குத்திருட்டு தான். ஆமை புகுந்த வீடு வீடு உருப்படாது என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அதேபோல் பாஜ நுழைந்த மாநிலமும் உருப்படாது.

* பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுக உடைந்த கண்ணாடி. அதை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது.

* நயினார், பாஜ மாநில தலைவர்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சிப்பது நல்ல விஷயம். வரவேற்கத்தக்கது. இருப்பினும் அதிமுக இணைப்பு குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் பேச வேண்டும். அரசியலில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. கடைசி ஒரு மாதத்தில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். நிச்சயமாக நல்லது நடக்கும்.

* துரைவைகோ, மதிமுக முதன்மை செயலாளர்

தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என்ன என்பதே அந்த கூட்டணியில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை. கொள்கை அடிப்படையில் பாஜ, அதிமுக கூட்டணி அமைக்கவில்லை. தேர்தலில் எத்தனை சீட் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி தான் அவர்கள் கூட்டணி வைத்துள்ளார்கள். திடீரென அந்த கூட்டணியில் சேர்கிறார்கள், திடீரென வெளியேறுகிறார்கள். இது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

* திருமாவளவன், விசிக தலைவர்

அதிமுகவில் கட்சியினரை ஒன்றிணைப்பதற்கு செங்கோட்டையன் எடுத்து வரும் முயற்சி பாராட்டக்கூடியது. செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை. இப்போது கூட அவர் யார் யாரை சேர்க்க வேண்டும் என வெளிப்படையாக சொல்லவில்லை. மனம் திறந்து பேசுவேன் என கூறிவிட்டு முழுமையாக மனம் திறக்க தயங்கினாரா என்ற கேள்வி எழுகிறது. செங்கோட்டையன் ஏற்கனவே சொன்ன கருத்து தான் இது. எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக நெருக்கடியை பாஜ தான் உருவாக்குகிறது என்கிற விமர்சனம் வலுவாக எழுந்துள்ளது.

* செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவர்

பாஜ-அதிமுக கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துள்ளனர். இதை பார்த்துக் கொண்டிருந்த டிடிவி.தினகரன், ஓபிஎஸ் வெளியே வந்துவிட்டார். அது மூழ்கின்ற கப்பல். அதில் ஏறினால் மூழ்கி விடுவோம் என்று ஒவ்வொருவராக காரணத்தை சொல்லி வெளியே வருகிறார்கள்.

* தமிமுன் அன்சாரி, மஜக பொதுச்செலாளர்

அதிமுகவை அழிக்க திட்டமிட்டுள்ள பாஜவின் நாடகத்தில் ஒன்றுதான் செங்கோட்டையனின் இந்த நாடகமும். அதிமுகவில் உள்ள அனைவரையும் தனித்தனியாக பிரித்தது பாஜ தான். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அதிமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்த செங்கோட்டையனை ஒரு ஆயுதமாக பாஜ கையில் எடுத்துள்ளது. செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு பின்னால் நிச்சயமாக பாஜ உள்ளது.

* ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி

செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி இரண்டு பேரையும் இயக்குவதே பாஜ தான். பாஜவின் விசுவாசியாக இருப்பதில் செங்கோட்டையன் மற்றும்-எடப்பாடி இடையே நடக்கும் போட்டிதான் இது. பாஜவிடம் விசுவாசத்தை காட்டுவதற்கு எடப்பாடியைவிட ஒரு இன்ச் மேலே நிற்கிறேன் என்று செங்கோட்டையன் காட்டியுள்ளார்.