*தினமும் 2 கி.மீ. தூரம் நடந்து செல்லும் அவலம் விழுப்புரம் ஆட்சியரிடம் புகார் மனு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 50 ஆண்டுகளாக பேருந்து வசதியில்லாததால் பொதுமக்கள் தினமும் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதாகவும், மினிபேருந்து வந்ததையும் தனியார் பேருந்து ஓட்டுநர் மிரட்டி நிறுத்தி விட்டதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வவ்வால்குன்றம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
சுமார் 2,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு இதுவரை பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. அணிலவாடி வரை பேருந்தில் வந்து பின்னர் அங்கிருந்து எங்கள் கிராமத்துக்கு 2 கி.மீ. தூரம் நடந்து வருகிறோம்.
முதியோர், பள்ளி மாணவ-மாணவிகள் இதனால் சிரமத்துக்குள்ளாகின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்கள் பேருந்து வசதியில்லாததால் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியவில்லை.
2 கி.மீ. தூரம் நடந்து வந்துதான் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். எங்கள் கிராமத்துக்கு அரசு பேருந்து வழித்தடம் 15 செஞ்சி-மேல்கூடலூர் செல்லும் பேருந்தையும் நிறுத்திவிட்டனர். அதன்பிறகு மினிபேருந்து வந்தது.
ஆனால் மற்றொரு தனியார் பேருந்து உரிமையாளர் இந்த மினிபேருந்து ஓட்டக்கூடாதென்று எங்களுக்கு மட்டும்தான் ஓட்டுவதற்கு பர்மிட் இருப்பதாக கூறி நிறுத்திவிட்டனர். எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து 50 ஆண்டுகளாக பேருந்து வசதியில்லாத எங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.