கவுகாத்தி: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதிப்போட்டி நேற்று, தென் ஆப்ரிக்கா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையே நடந்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீராங்கனைகள் கேப்டன் லாரா உல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ் அற்புதமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன் குவித்தனர். அதன் பின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும், லாரா நங்கூரமிட்டு நிலைத்து ஆடி ரன்களை விளாசினார்.
143 பந்துகளில் 4 சிக்சர், 20 பவுண்டரிகளுடன் அவர் 169 ரன் எடுத்தார். அவரது அதிரடியால் 50 ஓவரில் தென் ஆப்ரிக்கா 7 விக். இழந்து 319 ரன் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்தின் முதல் 3 வீராங்கனைகள் பூஜ்யத்தில் வீழ்ந்தனர். பின் வந்த கேப்டன் நாட் சிவர்பிரன்ட் (64 ரன்), ஆலீஸ் கேப்சி (50 ரன்) சிறப்பாக ஆடி, 4வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தனர்.
இந்த இணை வீழ்ந்த பின், தெ.ஆ. பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்து வந்தோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 42.3 ஓவரில் இங்கிலாந்து 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானதால், தென் ஆப்ரிக்கா 125 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தெ.ஆ. தரப்பில் மாரிஸான் காப் 5, நாடின் டிகிளார்க் 2, அயபோங்கா காகா, சூன் லூஸ், நொன்குலுலேகோ எம்லாபா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
* லாரா 5000 ரன்
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் லாரா உல்வார்ட் 115 பந்துகளில் சதம் விளாசினார். அவரது அதிரடியால், மகளிர் ஒரு நாள் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்த 2வது வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 5000 ரன் கடந்த முதல் வீராங்கனையாக இந்தியாவின் அதிரடி நாயகி ஸ்மிருதி மந்தனா திகழ்கிறார்.
