கடந்த தேர்தலை விட ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற வேண்டும்: தீவிர களப்பணியாற்ற காங்கிரசாருக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
சென்னை: கடந்த தேர்தலை விட, ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தினார். தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது என முப்பெரும் விழா சென்னை சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் தலைமை வகித்தார். இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கூட்டத்தில், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் பேசுகையில்,‘‘அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி அதிமுகவை அவர்களோடு கூட்டணி வைத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க மோடியும் அமித்ஷாவும் முயற்சித்து வருகின்றனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும்’’ என்றார். விழாவை தொடர்ந்து செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தீவிமாக்கி வருகிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் 2021 தேர்தலை காட்டிலும் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக 25000 வாக்குகளை அதிகமாக பெற்று தர வேண்டும். அவை காங்கிரஸ் கட்சியின் வாக்குகளாக இருக்க வேண்டும். இந்த வாக்குகள் தான் இந்தியா கூட்டணியின் வெற்றியை தீர்மானிக்கும் வாக்காளராக இருக்க வேண்டும்.
இதற்காக தான் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து காங்கிரஸ் பேரியக்கத்தை பலப்படுத்தி வருகிறோம். தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு தர வேண்டிய ரூ.2350 கோடியை தர ஒன்றிய பாஜ அரசு மறுக்கிறது. பாஜகவின் திட்டம் என்னவென்றால், தமிழ்நாட்டில் எந்த மாணவ மாணவிகளும் படிக்கக் கூடாது. அடுத்த தலைமுறை தமிழ்நாட்டில் கற்றல் அறிவு பெற்றவர்களாக இருக்கக் கூடாது என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். இதை முறியடிக்கும் வகையில், பாஜகவை நன்கு புரிந்து வைத்துள்ள தமிழக மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அசன் மவுலானா, மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், கே.விஜயன், டி.செல்வம், இமயா கக்கன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், இல.பாஸ்கரன், வசந்த் ராஜ், எஸ்.ஏ.வாசு, மாவட்ட பொருளாளர் ஏ.எஸ்.ஜார்ஜ், மாநில செயலாளர் ஏ.வி.எம்.ஷெரீப், சுசிலா கோபாலகிருஷ்ணன், சொல்வேந்தன், செல்வகுமார், பாண்டியராஜன், ரங்கநாதன், சுதந்திரசெல்வம், ராஜராஜேஸ்வரி, தனசேகர், ஈகை. கோகுலகிருஷ்ணன், செஞ்சி முத்தமிழ் மன்னன், கிண்டி கணேஷ், திநகர் ஏழுமலை, வடபழனி பாபு, ராஜமாணிக்கம், ராஜபாண்டி, தலைமை நிலையச் செயலாளர்கள் மன்சூர் அலி, இல.பூபதி, பி.வள்ளி, சரஸ்வதி, சந்திரசேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிலம்பன், ராஜ்கமல், ஆர்.கே.ராஜேஷ் ஆகியோர் நன்றியுரையாற்றினர்.