Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

சென்னை: முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டவும் பழைய அணையை இடிக்கவும் ஒன்றிய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை ஆய்வு செய்து தயார் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது.

இந்த விண்ணப்பம் வரும் 28 ஆம் தேதி மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டிருப்பதாக வந்திருக்கிற செய்தி தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. கேரள அரசின் இத்தகைய முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு, அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இதையொட்டி 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு பயன்படுகிற வகையில் நீர்மட்டத்தை 142 அடியாக உறுதி செய்து அனுமதி அளித்தது. அதே நேரத்தில், கேரள அரசு இயற்றிய சட்டத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அணையை பலப்படுத்திய பிறகு 152 அடிவரை நீரை தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதற்கு பிறகும் புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் கருத வேண்டியிருக்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு காண வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினாலும், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அணையை பலப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவால் உறுதி செய்யப்பட்ட பிறகு, கேரள அரசு இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அதையும் மீறி தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிக்கும் செயல்களில் கேரள அரசு ஈடுபடுமேயானால், உடனடியாக இதை தடுத்து நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுகின்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.