திருச்சியைச் சேர்ந்த செல்வ பிருந்தா என்கிற பட்டதாரி பெண் 300 லிட்டர் பாலை தானமாகக் கொடுத்து தேசத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரை அடுத்த காட்டூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வ பிருந்தா. பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு பிரனீத் என்ற ஆண் குழந்தையும், பிரணிக்கா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். பெண் குழந்தை பிறந்தது முதல் குழந்தையின் தேவையைக் காட்டிலும் கூடுதலாக தாய்ப்பால் சுரப்பதை கவனித்திருக்கிறார் செல்வ பிருந்தா. வீணாகும் தாய்ப்பாலை தேவைப்படுவோருக்குக் கொடுத்து
உதவலாம் என நினைத்திருக்கிறார்.
எத்தனையோ குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பல குழந்தைகள் உயிர் பறிபோகும் அபாயமும் செல்வ பிருந்தாவை தாய்ப்பால் தானம் கொடுக்க யோசிக்க வைத்தது. சிகிச்சையில் உள்ள அத்தகைய குழந்தைகளின் பசியைப் போக்கி, அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியையும், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு என்பதை செல்வ பிருந்தா புரிந்துகொண்டார். தன் குழந்தையின் பசியைப் போக்கியது போக மீதமாகும் பாலை மருத்துவர்களின் வழிகாட்டலுடன் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் தாய்ப்பால் தானம் கொடுக்கத் துவங்கினார். இரண்டு வருடங்களாக 300.17 லிட்டர் பால் செல்வ பிருந்தாவால் பல பச்சிளம் குழந்தைகளை சென்றடைந்திருக்கிறது.
“ தாய்ப்பால் தானம் சும்மா கொடுத்துவிட முடியாது. அதற்கு பின் ஏராளமான தயார் நிலைகள் உள்ளன. தாய்ப்பாலை பம்ப் செய்து சரியான குளிர் நிலையில் வைத்திருந்து பாதுகாத்துதான் கொடுக்க முடியும். இதில் என் கணவர், எனது மாமனார், மாமியார் உள்ளிட்டோர் சப்போர்ட்டும் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு முறை தாய்ப்பாலை சேகரித்து வைத்தவுடன் சரியான உறை நிலையுடன் அதைக் கொண்டு சேர்த்தது என் கணவர்தான். உடன் எனக்கு பம்ப் செய்து பாட்டிலில் சேகரிக்க மாமியார் உதவினார். அதனால்தான் இரண்டு வருடங்கள் என்னால் தொடர்ந்து இதைச் செய்ய முடிந்தது” என்கிறார் நிறைவான மனதுடன். திருச்சி அரசு மருத்துவமனையில் பல குழந்தைகள் தற்போது செல்வ பிருந்தாவால் வாழ்க்கைப் பெற்றுள்ளன. இதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ அமைப்பு மற்றும் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ அமைப்பும் சான்றிதழ் , பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளன. ‘‘ தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றுகிறோம் என்ற மகிழ்ச்சியில் எனக்கு குறைவில்லாமல் தாய்ப்பால் சுரந்தது. எல்லா பெண்களும் தங்கள் குழந்தைகளுக்குப் போக வீணாகும் பாலை இப்படி தானம் கொடுக்க முன்வந்தால் , தாய்ப்பாலும் குறைவில்லாமல் சுரக்குமாம். போதுமான மருத்துவ பரிசோதனை, தாய்ப்பால் பரிசோதனை உள்ளிட்டவை பெற்றுதான் நான் கொடுத்தேன்’’ என்கிறார் இந்தத் தாய்.
- கவின்