செங்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பரபரப்பு; நடிகை நமீதாவுடன் போட்டி போட்டு செல்பி எடுத்த பாஜகவினர்: பொதுமக்களும் வந்ததால் தப்பித்தால் போதும் என காரில் எஸ்கேப்
புழல்: பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாஜ சார்பில், செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாத தாக்குதல் நடந்து வந்தது. அது, தற்போது குறைந்துவிட்டது. 3 மாதங்களுக்கு முன்பு ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக பிரதமருக்கு நன்றி. இந்திய பொருட்களை பயன்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். நான் இந்திய தயாரிப்பையே பயன்படுத்துகிறேன். மேட் இன் இந்தியா என அனைவரும் உறுதி ஏற்று கொள்ளுங்கள்’ என்றார். கூட்டத்தில் நமீதா நீண்ட நேரம் பேசுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் 3 நிமிடங்களில் பேச்சை முடித்து கொண்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
முன்னதாக, நடிகை நமீதா நிகழ்ச்சிக்காக வந்தபோது, சாலையின் மைய பகுதியிலேயே பல சுற்று வண்ணப்பட்டாசுகளை வெடிக்க செய்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். காரில் இருந்து நடிகை நமீதா இறங்கியதும் அவருக்கு கட்சி நிர்வாகிகள் சாலையிலேயே வைத்து பாஜ பேட்ஜ் அணிவித்ததால், நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மேலும் மேடையில் நடிகை நமீதா 3 நிமிடம் பேசிவிட்டு மீண்டும் மேடையில் அமர்ந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அவரது அருகில் அமர்ந்து போட்டோ, செல்பி எடுத்தனர். தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து நிருபர்களுக்கு பேட்டி கொடுக்க மறுத்தார். அப்போது பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் புகைப்படம் எடுக்க முற்பட்டபோது அவர்களிடம் இருந்து தப்பித்து காரில் ஏறி புறப்பட்டார். நீண்ட நேரம் காரை கொண்டு வராததால் தனது டிரைவரை நமீதா கையை காண்பித்து திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.