அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்தவர் மதன சேகர்(52). இவர், ரயில்வே வங்கியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஹேமலதா, சென்னை புழல் சிறையில் வார்டனாக உள்ளார். இவர்களுக்கு, ஒரு மகன் உள்ளார். ஹேமலதா கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து மகனுடன் தனியாக சென்று விட்டாராம்.
இதனால் மதனசேகர், அவரது தாயார் புண்ணியவதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வங்கியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும், விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாலும் மதனசேகர் சரிவர வேலைக்கு செல்வதில்லையாம். இதனால் மதனசேகரும், புண்ணியவதியும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நேற்று காலை மதனசேகர், புண்ணியவதி இருவரும் ஒரே அறையில் தனித்தனியாக தூக்கில் சடலங்களாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியைடந்தனர்.
இந்நிலையில் தாயும், மகனும் இறப்பதற்கு முன்பு மதன சேகர் நேற்று முன்தினம் இரவு டைரியில், ‘தொழிலாளர்கள் நலன் காக்க மதன சேகர் மற்றும் அம்மா புண்ணியவதி வீரமரணம்’ என எழுதி இப்படிக்கு மதனசேகர் என கையெழுத்திட்டுள்ளார். அதனை செல்போனில் படம் பிடித்து சக தொழிலாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியதோடு, தாயுடன் இறுதியாக எடுத்த செல்பி படத்தையும் பகிர்ந்துள்ளார்.