தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைகடை உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
சென்னை: தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைகடை உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலின் போது பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் நயினார் நாகேந்திரன், கோவர்த்தனன், எஸ்.ஆர்.சேகர், நீலமுரளி யாதவிடம் விசாரணை நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பணம் பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் கொடுத்தனர். இதனை தொடந்து விசாரணைகள் நடைபெற்ற நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு வரிசையாக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது. சுமார் 15 பேருக்கு சம்மன் அனுப்பட்டது.
இந்த பணம் பணப்பட்டுவாட செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்டதா என்ற அடிப்படையில் விசாரணை நடத்த பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருந்த நீலமுரளி யாதவ், தமிழக பாஜக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சேகர், கோவர்த்தனன் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் தயார் செய்யபட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் போது ரூ.4 கோடி சென்னை சவுகார் பேட்டையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மூலமாக பணம் கிடைக்கப்பெற்றதாக தெரியவந்தது. இதனை அடுத்து நகைக்கடை உரிமையாளரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர். அதனடிப்படையில் நகைக்கடை உரிமையாளருக்கு சம்மன் அனுப்பபட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் சம்பந்தபட்டவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவுள்ளதாக சிபிசிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளது.