"இருவரும் குழந்தைகள் அல்ல; பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்" : சீமான், விஜயலட்சுமியை கண்டித்த உச்சநீதிமன்றம்!!
டெல்லி : இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்; பக்குவமாக நடந்து
கொள்ளுங்கள் என்று சீமான், விஜயலட்சுமியை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சீமான் பொதுவெளியில் விஜயலட்சுமி குறித்து பேசியதற்காக செப்டம்பர் 24ம் தேதிக்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால் சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பில், 'நீதிபதிகள் உத்தரவிட்டும் சீமான் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மன்னிப்பு கேட்கும் வகையில் இல்லை' என்று கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ''இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த விவகாரத்தை எத்தனை நாள் தான் இழுத்துக் கொண்டு செல்வது. அப்படி இருவரும் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு வர வைக்க வேண்டியது இருக்கும்''என்று தெரிவித்தனர்.
அப்போது விஜயலட்சுமி தரப்பில் மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ''நீங்கள் மன்னிப்பு கேட்க வில்லை என்றால், அவரை எப்படி மன்னிப்பு கேட்க சொல்ல முடியும். இருவரும் புகாரை திரும்ப பெற்றதையும், மன்னிப்பு கேட்டதையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு குறித்து இருவரும் எந்த ஒரு ஊடகத்திலும் பேசக் கூடாது. எந்த ஒரு பேட்டியோ, வீடியோவோ வெளியிடக் கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுப்போம்'' என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.