Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம்: பேரவையில் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: பேரவையில் கேள்வி நேரத்தின் போது அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ (திமுக) ஜோசப் சாமுவேல் பேசுகையில், தொழிலாளர்களை தேடி மருத்துவம் என்ற இத்திட்டத்தின் பயன்பாடு குறித்து தெரிவிக்க அரசு முன்வருமா? எனக் கேட்டார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு பயன்படுகிற வகையில், ஊரக நலப் பணிகள் இயக்கம் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் என்கிற அமைப்புகளோடு சேர்ந்து உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கான பரிசோதனை முகாம்கள் அந்தந்த தொழிற்சாலைகளிலேயே நடத்தப்படுகிறது. இத்திட்டத்தால் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.

ஜோசப் சாமுவேல்: இதுவரை அந்த திட்டத்தினால் எத்தனை தொழிலாளர்கள் பயன்பெற்றுள்ளனர் என்பதையும், தொழிற்சாலைகள் நிறைந்த, சுமார் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றக்கூடிய அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இத்திட்டத்தின் மூலம் 10-6-2024 வரை 476 தொழிற்சாலைகளில் 2,87,114 பேர்களுக்கு தொற்றா நோய்களுக்கான உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. 25,075 பேர் புதியதாக தொற்றா நோய்களுக்கான சாத்தியக்கூறு உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், ஏற்கெனவே தொற்றாநோய் பாதிப்புள்ளவர்கள் 11,062 நபர்கள் எனவும், தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாதவர்கள் 2,50,977 எனவும் கண்டறியபட்டிருக்கிறது.

அந்தவகையில், அம்பத்தூர் தொகுதியில் உறுப்பினர் கோரியிருப்பதைப் போல அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் 500க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், சிறிய தொழிற்சாலைகளும் இருக்கிறது. அதோடுமட்டுமல்ல, இன்றைக்கு கிண்டி, திருமுடிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளிலும் குறு சிறு தொழில்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கேயெல்லாமும் கூட இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து அவர்களுக்கும் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அந்த பணியும் விரைவில் நடைபெறவிருக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.