திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் பலபயிர் சாகுபடியில் முத்திரை பதிப்பவர். எந்தப் பயிராக இருந்தாலும் அதில் கணிசமான லாபத்தைப் பார்த்து விடும் இவர் பாரம்பரிய உருளை ரகமான கொடி உருளை சாகுபடியையும் தொடர்ந்து செய்து வருகிறார். கொடி உருளை சாகுபடி குறித்து அறிய அவரைச் சந்தித்தோம். `` உருளைக்கிழங்கோட டேஸ்ட் எல்லோருக்கும் பிடிக்கும். இந்தக் கொடி உருளை வழக்கமான உருளையை விட டேஸ்ட்டா இருக்கும்ங்க. ஒரே கொடி பல வருஷங்களுக்கு காய்க்கும். ஒரு கொடியில 5 கிலோ வரைக்கும் உருளை காய்க்கும்” என பேச ஆரம்பித்தவர், கொடி உருளை சாகுபடி குறித்து விளக்கத் தொடங்கினார்.
``கொடி உருளையை நடவு செய்ய ஆடிப்பட்டம் சிறப்பா இருக்கும். ஒரு சென்ட்டுக்கு 10 கிழங்கு நடலாம். வழக்கமான கொடி காய்களுக்கு செய்ற மாதிரி கல்பந்தல் போட்டு கொடியை அதில் படர விடலாம். மரங்களுக்கு அருகிலும் நடலாம். மரத்து மேல படர்ந்துக்கும். வேப்பமரம் தவிர வேற மரங்களின் பக்கத்திலும் கொடி உருளையை நடலாம். நடவு பண்ணி 3 நாளுக்கு ஒரு தடவை தண்ணி பாய்ச்சணும். நடவு பண்ணும்போது அடியுரமா தொழுவுரம் குடுக்கணும். ஆடிப்பட்டத்துல நடவு பண்ணா, செப்டம்பர்ல மழை தொடங்கிடும். அதுக்கப்புறம் நாம தண்ணி கூட கட்ட வேண்டியதில்ல.
மழைத்தண்ணியிலயே வளந்துடும். நட்ட 5 மாசத்துல கொடி வளந்து கிழங்கு வைக்க ஆரம்பிச்சிடும். இது அக்டோபர், நவம்பர்ல பூ பூத்து, டிசம்பர்ல கிழங்கு வைக்கும். மார்ச் வரைக்கும் கொடியில கிழங்கு காய்க்கும். அதுக்கப்புறம் ஏப்ரல் மே மாதங்களில் கொடி காஞ்சிடும். ஒரு ரெண்டு மாசம் ஓய்வெடுத்துட்டு, திருப்பி புதுமழை வரும்போது கொடிகள் மறுபடியும் கெளம்பி வந்துடும். நாம திரும்ப நடவு பண்ணத் தேவையில்ல. ஒரே கொடி பல வருஷங்களுக்கு காய்க்கும். மொதல்ல காய்ப்பு குறைவா இருக்கும். ஒரு கொடிக்கு 2 கிலோ கிடைக்கும். அடுத்தடுத்த வருஷம் அதிகமாகி, ஒரே கொடியில 5 கிலோ வரைக்கும் காய்க்கும். இந்த கிழங்கை தமிழ்நாட்டின் எல்லா சமவெளிப் பகுதிகளிலும் விளைவிக்கலாம். விளைச்சல் நன்றாக இருக்கும். ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இதை பயிரிடலாம்னாலும் குளிரால, காய்ப்பு சரியா இருக்காது.
அதனால, இத சமவெளிகளில் பயிரிடுவதுதான் நல்லது. நான் 5 சென்ட்ல கொடி உருளை போட்டிருக்கேன். சமையலுக்குப் பயன்படுத்தற கிழங்கு நமக்கு ஜனவரியில இருந்து கிடைக்கும்ங்க. அவ்ளோ சுலபமா உதிராது. காய் முத்திக் காஞ்சா மட்டும்தான் உதிரும். அதனால நாம கொடியிலயே பறிச்சிக்கலாம். இந்த கொடிஉருளை சாதாரண உருளைக்கிழங்கு மாதிரி மாவு மாவா இருக்காது. சேனைக்கிழங்கு மாதிரி கொழகொழப்பு தன்மையோட இருக்கும். எங்க தோட்டத்துல விளையுறதை உள்ளூர் சந்தையிலயே வித்துடறோம். உணவுக்கான கொடி உருளைக்கிழங்கு கிலோ 80லர்ந்து 120 ரூபாய் வரைக்கும் விற்கிறேன்” என்றவரிடம், விதைக்கிழங்கு பற்றி கேட்டோம்.``விதைக்கிழங்குக்கு கொடியிலயே கிழங்கை காய விட்றனும். ஏப்ரல், மே மாதங்களில் கொடியிலயே உருளை காய்ந்த பிறகு, அதிலிருந்து கிடைக்கற தரமான கிழங்கை எடுத்து வச்சிக்கறோம். அதை 60லர்ந்து 80 நாட்களுக்கு விதைஉறக்கம் பண்றோம்.
தரமான கிழங்கைத் தேர்ந்தெடுத்து, அதை காத்தோட்டமான இடத்துல காயவைக்கும்போது, கிழங்குல இருக்குற ஈரப்பதம் எல்லாம் ஆவியாகி 40 சதவீதம் வரைக்கும் எடை குறஞ்சிடும். 10 கிலோ எடையுள்ள கிழங்குகளை காயவைச்சா அது 6 கிலோ ஆகிடும். அதுல அழுகலை எல்லாம் தூக்கிப் போட்டுட்டா, தரமான விதைக்கிழங்குகள் 4 கிலோதான் கிடைக்கும். இந்தக் கிழங்குகள் தானாவே மொளைச்சி வரும். இதை விதைக்கிழங்கா குடுத்துக்கிட்டு இருக்கோம். ஒரு விதைக்கிழங்கை 20 ரூபாயில இருந்து 50 ரூபாய் வரைக்கும் விலை வச்சி குடுத்துட்டு இருக்கோம்” என்றார்.
தனது பலபயிர் சாகுபடி முறை குறித்து சதீஷ்குமார், `` கால்நடை வளக்கறோம். மலர் சாகுபடியில் மல்லிகை 20 சென்ட் வச்சிருக்கோம் ஆட்டுக்கொம்பு காவாலி, வெத்தல வள்ளிக் கிழங்கு, கொடி உருளை ஆகிய கிழங்குகள், சுரைக்காய், புடலங்காய் எல்லாம் சீசனுக்கு தகுந்த மாதிரி போடுவோம். வேர்க்கடலை போடுவோம். இந்தப் பட்டத்துக்கு உளுந்து விதைக்கப் போறோம்” எனத் தனது விவசாய முறையை பற்றிக் கூறினார்.
தொடர்புக்கு:
சதீஷ்குமார்: 98433 77470.