Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்கானிக் நிலக்கடலை...விதைப்பண்ணையில் நல்ல விலை!

தர்மபுரியில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சி.மோட்டுப்பட்டி எனும் கிராமம். சுமார் 300 வீடுகளைக்கொண்ட இந்த ஊரில், அனைவருக்கும் பொதுவான தொழில் விவசாயம்தான். ஒரு காலத்தில் நெல், சிறுதானியங்கள் என அனைத்து சாகுபடியும் செய்த ஊர். இப்போது விவசாயத்தைக் குறைத்துக்கொண்டாலும், பாரம் பரியமான விவசாயிகள் சிலர் இன்றளவும் விவசாயத்தை விடாப்படியாக செய்த வண்ணம் இருக்கிறார்கள். அப்படி, 40 வருடங்களாக தொடர் விவசாயம் செய்வது மட்டுமல்லாமல், கடந்த 8 வருடங்களாக இயற்கை வழி விவசாயம் செய்பவர்தான் எம்.காளியப்பன். பாரம்பரிய நெல் ரகங்கள், மஞ்சள், நிலக்கடலை என அனைத்தையுமே இயற்கை முறையில்தான் சாகுபடி செய்து வருகிறார். அவரைப் பற்றியும் அவரது விவசாய முறையைப் பற்றியும் தெரிந்துகொள்ள அவரது விவசாய நிலத்திற்குச் சென்றோம். நிலக்கடலை அறுவடையில் பிசியாக இருந்தவர், சிறிது நேரம் ஒதுக்கி எங்களிடம் பேசத் தொடங்கினார்.

``தாத்தா, அப்பா காலத்தில் அனைத்து வகையான விவசாயமும் எங்களது நிலத்தில் நடந்தது. கால்நடை வளர்ப்பு முதல் சிறுதானியங்கள் பயிரி டுதல் வரை அனைத்து வகையான சாகுபடியும் சீசனுக்கு தகுந்தபடி நடந்தது. அப்போதிருந்தே விவசாய வேலை களையும் விவசாயத்தையும் செய்துவந்த நான், கடந்த 40 வருடங்களாக தனியாக விவசாயம் செய்துவருகிறேன். இத்தனை வருடம் விவசாயம் ஒரு பக்கம், அடிக்கடி உடம்பு சரியில்லாமல் மருத்துவமனைக்குச் செல்வது ஒரு பக்கமுமாக இருந்த நான் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்று இயற்கை வழி விவசாயத்தை கையில் எடுத்தேன். எனக்கு மட்டுமல்லாமல், என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சேர்த்து, செயற்கை உரம் கலக்காத உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தேன். அதன்படி, கடந்த 8 வருடங்களாக இயற்கை வழி விவசாயம்தான் பார்த்து வருகிறேன்.

எனக்குச் சொந்தமாக, 4.5 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், 2 ஏக்கரில் 15 வகையான நெல் ரகங்கள் பயிரிட்டிருக்கிறேன். மீதமுள்ள நிலத்தில் மஞ்சளும், நிலக்கடலையும் போட்டிருக்கிறேன். தற்போது நிலக்கடலை அறுவடைக்கு வந்துவிட்டது. ஒன்றரை ஏக்கரில் நிலக் கடலை சாகுபடி நடந்த வண்ணம் இருக்கிறது. இது வைகாசி பட்டத்தில் விதைத்தது. நிலக்கடலையைப் பொறுத்தவரை, அதனை சாகுபடி செய்ய வேண்டுமென்றால் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே, அதற்கான நிலத்தை தயார் செய்ய வேண்டும். அதாவது, ஒரு மாதத்திற்கு முன்பே நிலத்தை நன்கு உழுது காயப்போட வேண்டும். முதல் உழவில் நல்ல ஆழ உழ வேண்டும். மண் கட்டியாக இல்லாதபடி உழ வேண்டும். முதல் உழவிற்கு பிறகு, மண்ணில் களைச் செடிகள் முளைத்திருக்கும். அந்த சமயம் இரண்டாவது முறை உழவு செய்ய வேண்டும். அடுத்த உழவில், ஒரு ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழுஉரத்தைக் கொட்டி உழவேண்டும். நிலக்கடலை சாகுபடிக்கு, இரண்டு விசயம் முக்கியமானது. ஒன்று மண் கட்டியாக இல்லாதபடி உழ வேண்டும். இன்னொன்று, அடி உரமாக கொடுக்கப்படும் தொழு உரம் நன்கு காய்ந்ததாக இருக்க வேண்டும். இந்த இரண்டையுமே நான் கடைபிடித்தேன். ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்ய, விதைக்கடலையாக இரண்டு மூட்டை நிலக்கடலை தேவை. அதாவது, 80 கிலோ தேவை. இந்த விதைக்கடலைகளை வாங்கி, நிலக்கடலை ஓடுகளை நீக்கி விதைகளை நேர்த்தியாக தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்த கடலையை நடவு செய்ய எடுத்துக்கொண்டேன்.

அதேபோல, நிலக்கடலை நடவு செய்யும்போது நிலத்தில் நீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, விதை விதைத்து அடுத்து பத்து நாட்கள் வரை நிலத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. அதனால், ஒரு மழைக்குப் பிறகு நிலத்தில் விதைகளை விதைக்கத் தொடங்கலாம். அல்லது, நிலத்தில் நீர் பாய்ச்சிய பிறகு விதைக்கத் தொடங்கலாம். அப்படி, விதைக்கிற விதைகளில் இருந்து 8வது நாள் செடி முளைக்கத் தொடங்கிவிடும். அடுத்த ஒரு வாரத்தில் செடியாகும் அளவிற்கு வளர்ந்துவிடும். சரியாக 25வது நாளில் ஒரு களை எடுப்பேன். அதன்பின் 60வது நாளில் இரண்டாவது களை எடுப்பேன். முதல் களை எடுத்த பிறகு முதல் நீர் பாய்ச்சுவேன். அதேபோல் 60வது நாளில் இரண்டாவது நீர் கொடுப்பேன். அதன்பிறகு அறுவடையின்போது மட்டும் மூன்றாவது நீர் கொடுத்து அறுவடை செய்வேன்.

இதற்கிடையில், பூ பூக்கும் சமயத்தில் வளர்ச்சி ஊக்கியாக மீன் அமிலமும் பஞ்சகவ்யமும் தெளிப்பேன். அதேபோல, செடிகளில் ஏதாவது மஞ்சள் புள்ளிகள் தென்பட்டால், நோய் தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு இலைக்கரைசல் தெளிக்கிறேன். இப்படி, வளர்கிற செடியில் இருந்து சரியாக நான்காவது மாதத்தில் நிலக்கடலைகளை அறுவடை செய்யத் தொடங்கலாம். எனது நிலத்தில் சராசரியாக, ஒரு ஏக்கருக்கு 600 முதல் 700 கிலோ வரை நிலக்கடலை கிடைக்கும். ஒன்றரை ஏக்கரில் ஒரு டன் வரை மகசூல் எடுக்கலாம். நான் கார்த்திகை பட்டத்தில் விதைத்ததால், மகசூல் கொஞ்சம் குறைவாக கிடைக்கும். இதுவே, கார்த்திகை பட்டத்தில் விதைத்தால் கூடுதல் விளைச்சல் கிடைக்கும். இரண்டு பட்டத்திற்கும் இடையில் காலநிலை மாற்றம் வேறுவேறு என்பதால், விளைச்சலிலும் வித்தியாசம் ஏற்படுகிறது. என்னளவில் இயற்கை வழி விவசாயம் என்பது முடிந்தளவு, செயற்கை பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதும், நிலத்திற்கு எந்த உரமும் கொடுக்காமல் விளைச்சலை எடுப்பதும்தான். அதைத்தான் நான் செய்து வருகிறேன். ஒன்றரை ஏக்கரில் ஒரு டன் நிலக் கடலை சாகுபடி குறைவாக இருந்தாலும், இயற்கை வழி விவசாயத்தில் இதுதான் நல்ல விளைச்சல். நிலக்கடலையோடு மட்டுமில்லாமல், நெல், மஞ்சள் என அனைத்தையுமே இயற்கை முறையில்தான் சாகுபடி செய்து வருகிறேன். இனிமேலும் இதைத்தான் செய்வேன் என உறுதியோடு பேசி முடித்தார்

விவசாயி காளியப்பன்.

தொடர்புக்கு:

காளியப்பன்: 94866 45915

ஒரு ஏக்கரில் 600 கிலோ நிலக்கடலையை அறுவடை செய்வதன் மூலம், 66 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது எனச் சொல்லும் காளியப்பன் அதே ஒரு ஏக்கருக்கு உழவு, எரு, விதைப்பு, அறுவடை என சராசரியாக 30 ஆயிரம் செலவாகிறது எனவும் கூறுகிறார்.

சராசரியாக ஒரு கிலோ நிலக்கடலை ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனை ஆகும். ஆனால், காளியப்பனின் நிலக்கடலை ரூ.110க்கு விற்பனை ஆகிறது. தர்மபுரி மாவட்ட விதைப்பண்ணைக்கு அவர் நேரடியாக விற்பனை செய்வதே இதற்கு காரணம்.

பாரம்பரிய நெல், மஞ்சள், நிலக்கடலை போக பசு மாடுகளையும் வளர்த்து வருகிறார் காளியப்பன். மாடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை இயற்கை விவசாயத்திற்கும் பயன்படுத்தியதோடு, அதில் இருந்து கிடைக்கும் பாலை விற்பனை செய்து தினசரி வருமானமும் பார்த்து வருகிறார்.