இம்பால்: மணிப்பூரில் 2 அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாம் மாநிலத்தின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நம்போல் சபல் லெய்காய் பகுதியில் துணை ராணுவப் படையினர் வந்த வாகனத்தின் மீது ஆயுதமேந்திய கும்பல் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்கள் காரணமாக தலைநகர் இம்பால் மற்றும் பிஷ்ணுபூரிலும் அமைதியின்மை நிலவியது. தாக்குதல் நடத்திய கும்பல் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சூரசந்த்பூரை சேர்ந்த பிரபல குகி சோ கவுன்சிலும் துணை ராணுவ படைகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.