ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மு.க.கொல்லை டேங்க் தெருவை சேர்ந்தவர் சபீர் அஹமத். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி. இவரது வங்கி கணக்கு மூலம் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றுள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த அமலாக்கத்துறை அலுவலக உதவி இயக்குனர் மோகித் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணியளவில் காரில் வந்து சபீர் அஹமத் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் அவரது ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மோசடியாக மர்ம நபர்கள் பணம் பரிமாற்றம் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அஹமத் மற்றும் உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.